''எந்த மொழியையும் ஒழிக என்று நான் கூறமாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை'' என்று நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் "விஸ்வரூபம் படத்திற்கு பிறகு, நான்கு ஆண்டுகள் கழித்து என் படத்தின் விழா நடைபெறுகிறது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், அதில் சினிமாவும், அரசியலும் பிரிக்க முடியாதவை. இரண்டும் ஒட்டிப்பிறந்தவையே.நான் முழு நேர நடிகன் கிடையாது. சில நேரம் நடிக்காமல் இருந்ததால் பல இன்னல்களை சந்தித்துள்ளேன். விழுந்தாலும் எழுந்துவிடுவார் என்று கூறுவார்கள். எழுப்பிவிட்டது நீங்கள்தான்.
நான் முதன் முதலில் அரசியலுக்குப் போகிறேன் என்று சொன்ன போது, சிம்புவின் தந்தை, டி.ஆர்.ராஜேந்திரன், 'எப்படி சார் நீங்கள் இதை செய்யலாம்?' என்றார். நான் பணத்துக்காக அரசியலுக்கு வரவில்லை. என் தகுதிக்கு மீறிய புகழை கொடுத்த மக்களாகிய உங்களுக்கு அதை நான் திருப்பிக் கொடுக்க வேண்டியது என் கடமை. ஐந்து வயதில் வந்தவனை இன்னும் நீங்கள் தோளில் இருந்து இறக்கவில்லை. மொழி போராட்டங்கள் சுதந்திர காலத்தில் இருந்து நடந்து வருகிறது. இந்தியாவின் அழகே பன்முகம் தான். இந்தி ஒழிக என்று சொல்கிறீர்களா என்று கேட்காதீர்கள்.
என் வேலை இன்னொரு மொழி ஒழிக என்பதல்ல. எந்த மொழியையும் ஒழிக என சொல்லமாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை. அதற்கு யார் எதிராக நின்றாலும், எதிர்க்க வேண்டியது என் கடமை. இந்தி, குஜராத்தி கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் தாய் மொழியை விட்டுக் கொடுக்காதீர்கள்.
ஓடிடியை முன்பே கணித்தவன் நான். இவை எல்லாம் வருவதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாது. இதற்கு உதாரணம் காலண்டரில் வெங்கடாசலபதி படம் போடுவதால் திருப்பதியில் கூட்டம் குறையாது'' என்றார்.