தமிழ் சினிமா

திரை விமர்சனம்: ஐங்கரன்

செய்திப்பிரிவு

நேர்மையான தலைமைக் காவலரின் மகன் ஏழுமலை (ஜி.வி.பிரகாஷ்). மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவர். ஏழை மக்களுக்கு பயன்படும்வகையில் பல கருவிகளை கண்டுபிடிக்கிறார். அவற்றுக்கு காப்புரிமை கேட்டுஅறிவுசார் சொத்துரிமை அலுவலகத்துக்கு செல்லும்போதெல்லாம் நிராகரிக்கப்படுகிறார். இதற்கிடையில், வடமாநில கொள்ளை கும்பலின் சதியால், மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் ஒரு சிறுமிவிழுந்துவிடுகிறாள். பதறும் ஏழுமலை, அச்சிறுமியை மீட்க புதிய கருவியை உருவாக்குகிறார். சிறுமியை மீட்க முடிந்ததா? சதிக்கு காரணமான கொள்ளையர்கள் பிடிபட்டார்களா என்பது கதை.

கருவிகளை கண்டுபிடிக்கும் ஏழுமலையின் தொடர் முயற்சிகள், பெரிய நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல், அதிக லாபத்துக்காக கறிக்கோழி வளர்ப்பில் நச்சு மருந்தை பயன்படுத்தும் தொழிலதிபர் என, ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற மூன்று வெவ்வேறு செயல்பாடுகளை மிக சாதுர்யமாக திரைக்கதையில் ஒன்றிணைக்கிறார் இயக்குநர் ரவி அரசு.

அரசு தரப்பில் குழந்தையை மீட்கப் போராடும் காட்சிகள் ரசிகர்களை பெரும்பதற்றத்தில் தள்ளுகின்றன. குழந்தையை ஏழுமலை எப்படி காப்பாற்றப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு, திரையைவிட்டு முகத்தை திருப்ப முடியாதபடி விறுவிறுப்பாக, நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவும், ராஜா முகமதுவின் படத்தொகுப்பும் முதுகெலும்பாக நின்று உதவுகின்றன. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் படத்துக்கு வலிமை சேர்க்கிறது.

நடிப்பு, சண்டைக் காட்சிகளில் அசரடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். முற்றிலும் புதிய பாணியில் ரசிக்கத்தக்க வையில் சண்டைக் காட்சிகளை ராஜசேகர் அமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் காதலியாக வரும் மகிமாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், வரும் எல்லா காட்சிகளிலும் கவர்ந்து செல்கிறார்.

கொள்ளை கும்பல் தலைவனாக வரும் சித்தார்த்தா சங்கர் தனது தோற்றம், முக பாவங்கள் வழியாகவே மிரட்டுகிறார். ஜி.வி.பிரகாஷின் அப்பாவாக வரும்ஆடுகளம் நரேன், நண்பனாக வரும் காளி வெங்கட், கெட்ட போலீஸாக வரும்ஹரிஷ் பெராடி அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக பங்களிக்கின்றனர்.

எளிய பின்புலத்தில் இருந்து வரும் இளம் விஞ்ஞானிகள், அவர்களது கண்டுபிடிப்புகளை அரசும், சமூகமும் மதித்துஅங்கீகரிக்க வேண்டும் என்கிற செய்தியை, ஒரு குற்றப் பின்னணி கொண்ட சம்பவத்தில் பொருத்தி சொன்ன வகையில், விறுவிறுப்பான திரை அனுபவத்தை தருகிறான் ‘ஐங்கரன்’.

SCROLL FOR NEXT