தமிழ் சினிமா

திரை விமர்சனம்: ரங்கா

செய்திப்பிரிவு

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆதித்யாவுக்கு (சிபி சத்யராஜ்) வலது கை சும்மா இருந்தால், அவராலேயே அந்த கையை கட்டுப்படுத்த முடியாது. இவரது அலுவலகத்தில் புதிதாக பணியில் சேரும் அபிநயாவை பார்த்ததும், அவர் தனது சிறுவயது தோழி என்பதை அறிந்து காதலிக்கத் தொடங்குகிறார். பெற்றோர் ஏற்பாட்டில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. தேனிலவுக்காக இமாச்சல பிரதேசத்தின் மணாலிக்கு சென்று, நட்சத்திர விடுதியில் தங்குகின்றனர் இளம் தம்பதியர். அங்கு தங்குபவர்களை ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோ எடுத்து, இணையத்தில் விற்று பணமாக்கும் கும்பலின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதி அது. இதை கண்டறியும் ஆதித்யாவும், அவரது மனைவியும் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். எதிர்பாராதவிதமாக அந்த கும்பலிடம் சிக்குகின்றனர். வலது கை உதவியால் மனைவியுடன் ஆதித்யா தப்பினாரா என்பது கதை.

வித்தியாசமான கதைபோல தோன்றினாலும், பிடிமானம் இல்லாத திரைக்கதையால் பெரும்பாலான காட்சிகள் துண்டு துண்டாக நிற்கின்றன. நாயகனின் ‘கை’ பிரச்சினையை அறிமுகப்படுத்துவது, தோழியை அவர் சந்திப்பது, காதலிப்பது, திருமணம் செய்துகொள்வது வரை, முதல் பாதி திரைப்படத்தை ஜாலியாக, கலகலப்பாக நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் வினோத் டி.எல்.

ஆனால், மணாலியில் நாயகனும், நாயகியும் மாட்டிக்கொண்ட பிறகு ‘ட்ரீட்மென்ட்’டில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. ‘கார் சேஸிங்’, உறைபனியில் துரத்தல், நாயை வைத்து துரத்தல் என பாதி படம் முழுவதையும் துரத்தல் காட்சிகளால் நிறைப்பது ஒப்பேற்றல்.

இயக்குநரின் பார்வையில், அவர்காட்டும் பனிமலைப் பிரதேசத்தில் இருப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்களாக மட்டுமே இருக்கின்றனர். இதை தவிர்த்திருக்கலாம்.

சிபி ராஜ் தனது நடிப்பு பாணியைமாற்றிக்கொண்டாலும், அவரையும் அறியாமல் அவ்வப்போது அப்பாவின்சாயலை வெளிப்படுத்திவிடுகிறார். ஆனால், ஆக்‌ஷன் காட்சிகளில் குறைசொல்லமுடியாத உழைப்பு. நாயகி நிகிலா விமல் நிறைவான நடிப்பை கொடுக்கிறார். வில்லன் குழுவினரின் நடிப்பு, செயற்கையான நாடகம். மனோபாலா, சதீஷ், ஷாராவை இன்னும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம்.

காட்சிகளை எப்படி படமாக்குவது என்கிற ‘மேக்கிங்’ தெரிந்த இயக்குநருக்கு, உற்சாகமூட்டும் திரைக்கதையை எப்படி படைப்பது என்கிற கலை பிடிபடவில்லை. முழுமையடையாத வெற்றுத் துரத்தல் ‘ரங்கா’.

SCROLL FOR NEXT