தமிழ் சினிமா

தமிழில் நிவின் பாலியுடன் இணையும் யூ-டர்ன் புகழ் ஷ்ரதா

ஐஏஎன்எஸ்

இயக்குநர் பவன்குமாரின் சமீபத்திய கன்னட த்ரில்லர் படமான 'யூ- டர்ன்' படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்த ஷ்ரதா ஸ்ரீநாத், நிவின் பாலியுடன் தமிழ்ப் படமொன்றில் நடிக்க உள்ளார்.

அறிமுக இயக்குநரான கெளதம் ராமச்சந்திரன், இந்த படத்தை அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கிறார். இது, 'உலிடவரு கண்டந்தே' என்னும் கன்னட க்ரைம் த்ரில்லர் படத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இதில் ஷ்ரதா ஸ்ரீனாத், க்ரைம் ரிப்போர்ட்டராக நடிக்க உள்ளார்.

பல மாதங்கள் நடைபெற்ற ஆடிஷனுக்குப் பிறகு இப்படத்துக்கு ஷ்ரதா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மிஷ்கின் மற்றும் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த கெளதம் ராமச்சந்திரன் படம் குறித்து கூறியது:

''ஆடிஷனில் நான் முதலில் பார்த்த பெண்களில் ஷ்ரதாவும் ஒருவர். அவர் இந்த பாத்திரத்துக்கு சரியாக இருப்பார் என்று தோன்றினாலும், தொடர்ந்து ஆடிஷனை நடத்தினோம். சுமார் ஐந்து மாதங்கள் நடைபெற்ற ஆடிஷனில் ஏராளமான பெண்களைப் பார்த்தோம். ஆனால் அவர்களில் யாருமே ஷ்ரதாவைப் போல அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தவில்லை.

இரண்டாவது முறை ஷ்ரதாவை அழைத்தோம். அவர் மிகவும் தயாராக வந்திருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட வசனங்களைக்கூட மனப்பாடம் செய்து வைத்திருந்தார். இரண்டாவது ஆடிஷனில் அவர்தான் ஹீரோயின் என்று முடிவு செய்தேன்.

படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த யோசனையில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் பிரபலமான கதாநாயகியை வைத்து படத்தை எடுக்க ஆசைப்பட்டார்கள். சில நாயகிகளும் இதில் ஆர்வமாக இருந்தனர். ஆனால் ஷ்ரதாவின் இரண்டாவது ஆடிஷனைப் பார்த்தவர்கள், அவர்தான் இந்த பாத்திரத்துக்கு சரியாக இருப்பார் என்று சம்மதித்தனர். இந்த முடிவுக்கு நிவினும் ஆதரவாக இருந்தார். இதைத் தொடர்ந்து படத்தின் மற்ற பாத்திரங்கள் முடிவு செய்யப்பட்டு வருகின்றன'' என்றார்.

அடிப்படையில் வழக்கறிஞரான ஷ்ரதா, இரண்டு கன்னடப் படங்களிலும் ஒரு மலையாளப் படத்திலும் நடித்திருக்கிறார். 'யூ - டர்ன்' படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்து திரைத்துறையைக் கவர்ந்தவர் ஷ்ரதா என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT