காவலர் மாயன் (ஆர்.கே.சுரேஷ்), குற்றப் புலனாய்வில் அபாரதிறமைசாலி. விருப்ப ஓய்வுபெற்று தனியாக வசிக்கிறார். அவரைபிரிந்து சென்ற மனைவியும் (பூர்ணா), மகளும் அடுத்தடுத்து விபத்தில் உயிரிழக்கின்றனர். அது கொலை என சந்தேகிக்கும் மாயன், நண்பர்களின் துணையுடன் புலன் விசாரணையில் இறங்கி,மனைவி, மகளின் மர்ம மரணத்தில்ஒளிந்திருக்கும் முடிச்சுகளை எப்படி அவிழ்க்கிறார் என்பது கதை.
கடந்த 2018-ல் வெளியான ‘ஜோசப்’என்ற மலையாளப் படத்தின் மறுஆக்கமே ‘விசித்திரன்’. மூலப் படத்தை இயக்கிய எம்.பத்மகுமார், தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். அதனாலோ, என்னவோ திரைக்கதையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் செய்யவில்லை. வசனங்களைக்கூட மலையாளத்தில் இருந்து ஜான் மகேந்திரன் தமிழில் மொழிபெயர்க்க, அதையே பயன்படுத்தியுள்ளார் இயக்குநர்.
மெதுவாக தொடங்கி, படிப்படியாக முடிச்சுகள் அவிழ்ந்து, பின்னர் இறுதிவெடிப்பு நிகழும் த்ரில்லர் வகை கதை.கதாபாத்திரங்களின் உணர்வுகளை ஆழமாக உணர்த்துவதற்காக முதல் பாதியில் நிதானமாக நகரும் திரைக்கதைஆங்காங்கே அலுப்பூட்டுகிறது.
கணவனை பிரிந்த மனைவி வேறொருவரை திருமணம் செய்துகொண்ட பிறகும், முன்னாள் கணவனுக்கும் அவளுக்குமான நட்பு ஆரோக்கியமாக தொடர்வது, இரண்டாம் கணவரும் தன் மனைவிமீது அப்பழுக்கற்ற அன்பும் தன் மனைவியின் முன்னாள் கணவர் மீது மதிப்பும் கொண்டிருப்பது என உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்துவது சிறப்பு.
மாயனாக ஆர்.கே.சுரேஷ் சிறப்பானபங்களிப்பை வழங்குகிறார். அவரது நண்பர்களாக வரும் இளவரசு, ஜி.மாரிமுத்து, மனைவியாக பூர்ணா, அவரது இரண்டாம் கணவராக பகவதிபெருமாள் என அனைவருமே தமதுபங்கை சரியாக தருகின்றனர். ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் படத்தின் உணர்வுப்பூர்வமான அடிப்படைக்கு வலுவூட்டுகின்றன. குற்ற விசாரணையின் பரபரப்பைமேம்படுத்த உதவுகிறது பின்னணி இசை.வால்பாறை மலைப் பகுதியின் இளவெயிலின் இதத்தையும், குற்ற சம்பவங்களின் கோரத்தையும் உயிரோட்டத்துடன் காட்சிப்படுத்துகிறது வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு.
ஒரு சாதாரண மனிதர், தனது புத்திக்கூர்மை, காவல் பணி அனுபவம் மூலம்விசாரணையில் படிப்படியாக முன்னேறுவது, தனக்கே உரிய பலவீனங்களின் காரணமாக சில இடங்களில் பின்னடைவை சந்திப்பது ஆகியவற்றை மிக எதார்த்தமாக, அதே நேரம் சுவாரஸ்யம் குன்றாமல்தருவது ஓர் அசலான த்ரில்லர் படமாக‘விசித்திர’னை உருக்கொள்ளச் செய்கிறது. மேலும், மருத்துவத் துறை தொடர்பான ஒரு பெருங் குற்றத்தை, காத்திரமான சட்ட நடவடிக்கைகள் மூலம் அம்பலப்படுத்துவதால், சமூகத்தின் மனநிலையிலும் தாக்கம் ஏற்படுத்தும் படமாக ‘விசித்திரன்’, விறுவிறுப்பான திரை அனுபவத்தை தருகிறான்.