தமிழ் சினிமா

திரை விமர்சனம்: ஹாஸ்டல்

செய்திப்பிரிவு

கல்லூரி மாணவரான கதிர் (அசோக் செல்வன்), கெடுபிடிகள் நிறைந்த தனது மாணவர் விடுதிக்குள் அதிர்ஷ்டலட்சுமி (பிரியா பவானி சங்கர்) என்ற பெண்ணை திருட்டுத்தனமாக அழைத்து வந்து, தனது அறையில் ஒளித்துவைக்கிறார். விருப்பம் இல்லாத திருமண ஏற்பாட்டில் இருந்து தப்பிக்க, ஓர் இரவு மட்டும் அங்கு தங்க எண்ணிய அந்தப் பெண்ணால் அடுத்த நாள் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. விடுதிக்குள் பெண் நடமாடுவதை மோப்பம் பிடிக்கும் காவலாளி சாத்தப்பன் (ராம்தாஸ்), விடுதி வார்டனான பாதிரியார் குரியகோஸிடம் (நாசர்) விஷயத்தை சொல்ல.. ஒவ்வொரு அறையாக தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். அதில் கதிரும், அவரதுநண்பர்களும் சிக்கினரா? அதிர்ஷ்டலட்சுமிக்கு கதிர் உதவியது ஏன்? உண்மையாகவே விடுதிக்குள் நுழைந்த பெண் அவர் மட்டும்தானா என பல கேள்விகளுக்கு கலகலப்பு குறையாமல் பதில் சொல்கிறது கதை.

2015-ல் வெளியான ‘ஆதி கப்யரே கூட்டமணி’என்ற மலையாளப் படத்தை, சுமந்த் ராதாகிருஷ்ணன் பல மாற்றங்கள் செய்து இயக்கியுள்ளார். வார்டன், காவலாளி இருவரையும் அறிமுகப்படுத்தும்போதே காமெடி தர்பார் தொடங்கிவிடுகிறது. சூழ்நிலையில் முகிழ்க்கும் நகைச்சுவை, அடல்ட் நகைச்சுவை இரண்டையும் படம் முழுவதும் சீராக தூவியுள்ளனர். ஒருசிலஇடங்கள் முகம்சுளிக்க வைத்தாலும் பெரும்பாலும் கேரன்ட்டியாக சிரிக்கவைக்கின்றனர்.

ஒரு பக்கம், வார்டனுக்கும், காவலாளிக்கும் தெரியாமல் பிரியாவை விடுதியைவிட்டு வெளியே அனுப்ப அசோக் செல்வனும், நண்பர்களும் பெருமுயற்சி செய்கின்றனர். இன்னொரு பக்கம், விடுதிக்குள் ஒரு பெண் இருப்பதை நம்ப மறுக்கும் வார்டனுக்கு, ஆதாரத்துடன் அதை நிறுவத் துடிக்கும் ராம்தாஸின் துரத்தல். இந்த ‘ட்ராமா’, பார்வையாளர்களை கடைசி வரை ‘என்கேஜ்டு’ ஆக வைக்கிறது. கடைசி 30 நிமிடத்துக்கு ஒரு பேயின் கையிலும்கதைக்களம் சிக்கும்போது, படம் கிளைமாக்ஸை நோக்கி ‘நான் ஸ்டாப்’ நகைச்சுவை தோரணமாக விரைகிறது.

முதல்முறையாக அசோக் செல்வன் முழு நீள நகைச்சுவை படத்தில் குறைசொல்ல முடியாதபடி நடித்துள்ளார். பிரியா பவானி சங்கரும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பு. வார்டனாக வரும் நாசரும், காவலாளியாக வரும்முனீஸ்காந்தும் நாயகன், நாயகியை மீறி நினைவில் நிற்கின்றனர். அசோக் செல்வனின் நண்பர்களாக வரும் சதீஷ், யோகி, கிரிஷ் கூட்டணியின் பங்களிப்பு சுமார் ரகம். அதிர்ஷ்டலட்சுமியின் அப்பாவாக வரும் ரவிமரியாவும், பேயாக வரும் அறந்தாங்கி நிஷாவும் நிகழ்த்தும் ரகளைகள் அதையெல்லாம் ஈடுகட்டிவிடுகிறது.

மாணவர் விடுதி என்ற ஒரே ‘லொக்கேஷ’னுக்குள் 90 சதவீத கதை நிகழும் சவாலை, தனது ஒளிப்பதிவு மூலம் திறமையாக சமாளிக்கிறார் பிரவீன் குமார். போபோ சசியின் பின்னணி இசை நகைச்சுவை களத்துக்கு கைகொடுக்கிறது.

லாஜிக் பற்றி யோசிக்க வாய்ப்பு அளிக்காமல், பார்வையாளர்கள் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே இருந்தால் போதும் என்ற நோக்கத்துடன் கோடை விடுமுறைக்கு ஏற்ற ‘ஹாஸ்டல்’ ஆக தந்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT