இந்திய திரையுலகில் இந்தி மொழி குறித்த சர்ச்சை நீண்டுகொண்டே செல்கிறது. தெலுங்கு முன்னணி நடிகரான சிரஞ்ஜீவி சினிமாவில் இந்தி மொழி ஆதிக்கம் குறித்து தனது கவலையை சில தினங்கள் முன் வெளிப்படுத்தி இருந்தார். இப்போது, தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகை சுஹாசினி இந்தி மொழி குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், "நடிகர்கள் அனைத்து மொழிகளும் தெரிந்துகொள்ள வேண்டும். அனைத்து மொழிக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும். இந்தி நல்ல மொழியே. இந்தி பேசுபவர்கள் நல்லவர்களே. அவர்களிடம் நாம் பேச வேண்டும் என்றால் அவர்களின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்" என்பது போல் பேசியிருந்தார்.
அதேநேரம் நடிகை சுஹாசினியின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் இயக்குநர் அமீர். சுஹாசினியின் இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்ற கருத்துக்கு, "அப்படியானால் தமிழ் பேசுபவர்கள் கெட்டவர்களா" என்ற கேள்வியுடன் பேசிய அமீர், "இந்தி பேச வேண்டும் என்பது பாசிசம். கலைக்கு மொழி தடை கிடையாது. தமிழ் சினிமா கலைஞர்கள் வெளி மாநிலங்களில் தமிழ் தொடர்பாக பேசுவதில்லை.
ஏனென்றால், அது அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பறிபோக வைக்கும் என்ற அச்சம். தமிழ் சினிமாவில் உச்சநடிகர்கள் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதற்காக மொழி பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசுவதில்லை. இது அவர்களை நேசிக்கும் அந்த மொழி ரசிகர்களுக்கு செய்யும் துரோகமே" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.