தமிழ் சினிமா

திரை விமர்சனம்: காத்து வாக்குல ரெண்டு காதல்

செய்திப்பிரிவு

பகலில் கால் டாக்ஸி ஓட்டுநராகவும், இரவில் ‘பப்’ ஒன்றில் ‘பவுன்சர்’ ஆகவும் வேலை செய்யும் ராம்போ (விஜய்சேதுபதி), ஒரே நேரத்தில் கண்மணி (நயன்தாரா), கதீஜா (சமந்தா) என்ற 2 பேரைகாதலிக்கிறார். அவர்களுக்கு உண்மைதெரியவரும்போது, ராம்போ சொல்லும்காரணங்களுக்காக அவனை மன்னிப்பதுடன், ராம்போவை திருமணம் செய்துகொள்ளவும் போட்டி போடுகின்றனர். காதலிகளில் ஒருவர் விலகிவிடலாம் என்றால், இருவரையுமே திருமணம் செய்துகொண்டு வாழ விரும்புகிறான் ராம்போ. இறுதியில் அந்த பெண்கள் என்ன முடிவு எடுத்தனர் என்பது கதை.

பிறப்பில் இருந்தே தன்னை துரதிர்ஷ்டம் துரத்துவதாக நாயகன் கருதுவது, படுத்த படுக்கையாக இருக்கும் அம்மாவின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்புஆகிய காரணங்களுக்காக, ஒரே நேரத்தில்2 பெண்களின் காதல் தன்னை நாடிவரும்போது, அதை தனது அதிர்ஷ்டமாககருதி 2 காதல்களையும் ஏற்றுக்கொள்வதாக சித்தரிக்கிறார் இயக்குநர் விக்னேஷ்சிவன். இருவரை ஏற்க விரும்பும் நாயகனின் குணம், ஆண் மையச் சமூகம் அவர்களுக்கு அளித்திருக்கும் இழிவான சலுகையின் வெளிப்பாடு என்பதை வசதியாக மறந்தும் விட்டார்.

இறுதியில் நாயகன் உடனான தங்கள் உறவு குறித்து இரு பெண்களும் எடுக்கும் முடிவின் மூலம், குடும்பம், திருமண வாழ்க்கை என சமூகம் புனிதமாகக் கருதும் விஷயங்களை மலினப்படுத்தும் அபாயத்தை தவிர்த்துவிட்டார்.

கண்மணி, கதீஜா இருவரும் தற்சார்பு, நவீன சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இருவரும், தன்னை காதலிக்கும்போதே இன்னொரு பெண்ணையும் காதலிப்பதாக கூறும் ஒருவனுக்காக போட்டா போட்டி போடுகின்றனர். சுயசார்பு கொண்ட இருவருக்கும் வேறு துணையே கிடைக்காதா என்றகேள்வியை தவிர்க்க முடியவில்லை.

முதல் பாதியில் கலகலப்பாக செல்லும்படம், இரண்டாம் பாதியில் ராம்போவின் காதல்போல தடுமாறுகிறது.

வழக்கம்போல விஜய்சேதுபதி தனதுதனித்தன்மையை நடிப்பில் கொண்டுவந்துவிடுகிறார். முதிர்ச்சியான பெண்ணாக நயன்தாராவும், நவீன பெண்ணாகசமந்தாவும் திரையை அழகுறச் செய்கின்றனர். ரெடின் கிங்ஸ்லி, மாறன் உள்ளிட்டதுணை நடிகர்கள் ஒருசில இடங்களில்சிரிக்க வைக்கின்றனர். முன்னாள்கிரிக்கெட் வீரர் சாந்த், நடனக் கலைஞர் கலா ஆகியோரும் கவனிக்க வைக்கின்றனர். அனிருத்தின் பாடல்களும், பின்னணிஇசையும் பல காட்சிகளை தேற்றஉதவுகின்றன.

காதல் என்பது ஆதி உணர்வு. அதை, ‘காற்று வாக்கில் வந்து சேர்கிற, அல்லது கடந்து செல்கிற ஒன்று’ என்பதுபோல படத்துக்கு தலைப்பு வைத்திருப்பதே விடலைத்தனமானது. தலைப்பில் தொடங்கும் இந்த பிழையான புரிதல், படமெங்கும் வியாபித்திருக்கும் ‘பஞ்சர்’ ஆன காதல் இது.

SCROLL FOR NEXT