தமிழ் சினிமா

முதல் பார்வை: இது நம்ம ஆளு - கடந்து செல்லும் காதல்!

செய்திப்பிரிவு

பல மாதங்களாக போடப்பட்ட சுவாரசிய டிரெய்லர், மீண்டும் சிம்பு - நயன் இணை, சந்தானம் கலாய்ப்பு என எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியிருக்கிறது 'இது நம்ம ஆளு'.

சில காதல்களைக் கடந்த சிம்பு, அப்பா சொல்படி நயன்தாராவைப் பெண்பார்க்கிறார். இருவீட்டாரின் சம்மதமும் இருந்தும், கல்யாணச் சிக்கல்கள் வருகிறது. சிம்பு - நயனின் பழைய காதல் குறித்த இருவருக்குமிடையிலான புரிதல்கள் அவர்கள் கல்யாணத்துக்கு தடைபோடுகிறதா, இருவரும் இணைகிறார்களா என்பதை கொஞ்சம் இழுத்து சொல்லியிருக்கிறார்கள்.

சிம்புவுக்கு நிச்சயம் இது ஒரு முக்கியமான படம். 'பீப்' பாடல், பாண்டிராஜுடன் மோதல், நடிகர் சங்கத் தேர்தல் என சில பல பிரச்சினைகளைத் தாண்டி, படம் வெளியே வந்ததே பாதி வெற்றி.

வழக்கமான ஹீரோ பில்ட்-அப், பத்து பேரை அடித்து பறக்கவிடும் காட்சிகள் இல்லாதது மிகப் பெரிய ஆறுதல்.

சிம்புவுக்கு இந்தப் படத்தில் அல்வா மாதிரியான ரோல். அள்ளி சாப்பிட்டிருக்கிறார். அதுவும், அவருக்கும் நயனுக்குமான காட்சிகளில் கெமிஸ்ட்ரி, பழைய ஹிஸ்டரி எல்லாம் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. நயன் படம் முழுவதும் வருகிறார். தெனாவட்டாக சிம்புவை டீல் செய்வதில் தொடங்கி, கலங்கியழும் காட்சிகள் வரை நயன் ராஜாங்கம்.

படத்தின் பெரிய பலம் - பாண்டியராஜின் வசனங்களும், சூரியின் டைமிங்கும். பாண்டிராஜின் மைண்ட் வாய்ஸ்-ஆகவே படம் நெடுக கவுண்டர் வசனங்கள். சிம்பு பேசினாலும், நயன் பேசினாலும், சூரி கொடுக்கும் கவுன்ட்டர்களுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ். ரொம்பவும் எதிர்பார்த்த சந்தானம், இரண்டு, மூன்று காட்சிகளில் வந்து போகிறார்.

பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும், பிரவீன் - பிரதீப் ராகவ் இணையின் எடிட்டிங்கும் கைகொடுத்த அளவிற்கு பாடல்கள் படத்துக்கு கைகொடுக்கவில்லை. குறளரசனுக்கு முதல் படம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

ஆண்ட்ரியா, வழக்கமாக ஆர்யா வரும் ரோலில் ஜெய், ஜெயப்பிரகாஷ், உதயபானு மகேஷ்வரன், தீபா ராமானுஜம்.. என குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு விளையாடியிருப்பது புத்திசாலித்தனம். ஆனாலும் படம் நெடுக செல்போனில் பேசிக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? அதுவும் பின் பாதி படத்தில் முழுவதும் பேசித் தீர்க்கிறார்கள். பேசாமல் படத்துக்கு 'இது நம்ம செல்லு' என்று பெயர் வைத்திருக்கலாம்!

ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடும் அதா ஷர்மா போஸ்டரில் ஒட்டவும், டீவியில் ஆடவும் பயன்படலாம். மற்றபடி படத்துக்கு ம்ஹூம்.

செல்போன் தலைமுறையின் அதீதங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். முன்னாள், இந்நாள் காதலர்களுக்கு இந்தப் படம் பிடிக்க வாய்ப்புண்டு. அதற்காக, விண்ணைத் தாண்டி வருவாயா அளவிற்கு எதிர்பார்த்து உள்ளே போனீர்கள் என்றால்.. சாரி, இது வேற படம்.

இது நம்ம ஆளு - செல்ஃபி விமர்சனத்துக்கு >

</p>

SCROLL FOR NEXT