"நான் எந்தக் கட்சியையும், எந்த தனிப்பட்ட நபர் சார்பாகவும் இந்த படத்தை எடுக்கவில்லை" என்று 'கோ 2' இயக்குநர் சரத் தெரிவித்தார்.
இயக்குநர் சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கோ 2'. எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இப்படம் மே 13ம் தேதி வெளியாகி இருக்கிறது.
இப்படம் குறித்து இயக்குநர் சரத், "நான் எந்தக் கட்சியையும், எந்த தனிப்பட்ட நபர் சார்பாகவும் இந்த படத்தை எடுக்கவில்லை. அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை ஒரு சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்கிறான் என்பது தான் இந்தப் படம்.
முதல்வர் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். முதல்வர் பொறுப்பு என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை மக்கள் உணரும்படி அந்த பாத்திரத்தை அமைத்திருக்கிறேன்.
என்னுடைய நண்பர்கள் என்னை 'ப்ரணீநிதி' என்ற படத்துக்கு அழைத்துச் சென்றார்கள். 15 நிமிடங்களில் அப்படத்தில் இருக்கும் சாத்தியக்கூறுகள் தெரிந்தது. அதன் மூலமாக தான் 'கோ 2' படம் தொடங்கியது. முதலில் இப்படத்தை சக்ரி டோடல்டி தான் தயாரிப்பதாக இருந்தார். முதலில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவிருந்தார். அதற்கு பிறகு பாபி சிம்ஹா நாயகனாக நடிக்க. எல்ரெட் குமார் தயாரிப்பது உறுதியானது. தேர்தல் காலத்தில் இருக்கும் மக்கள் மனநிலைக்கு ஏற்ப இப்படம் இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கவிருக்கிறார். அதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பாபி சிம்ஹாவுக்கு வில்லனாக முன்னணி தெலுங்கு நடிகர் நடிக்கவிருக்கிறார். அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகிறது.