தமிழ் சினிமா

தாமதமாகும் பாலாவின் அடுத்த படம்

ஸ்கிரீனன்

'தாரை தப்பட்டை' படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் எனத் தெரிகிறது.

'தாரை தப்பட்டை' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெறும் போதே விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா ஆகியோர் நடிக்கும் படத்தை அடுத்து இயக்கவிருப்பதாக பாலா அறிவித்தார். பல்வேறு முன்னணி நாயகர்கள் இணைவதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டானது.

'குற்ற பரம்பரை' படத்தை பாலா எடுக்கவிருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா - இயக்குநர் பாலா இருவருக்குமே வார்த்தைப் போர் உண்டானது. இதில் எழுத்தாளர் ரத்தினகுமாரும் பாலா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். "தான் எடுக்கப் போகும் கதை 'குற்ற பரம்பரை' இல்லை. வேறு ஒரு கதை" என்று பாலா விளக்கம் அளித்தார்.

பாலாவின் மும்முரமான அறிவிப்பால், படப்பிடிப்பு உடனடியாக தொடங்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், தற்போது 2017 ஜனவரியில் தான் படப்பிடிப்பு தொடங்கப்படும் என விஷால் தெரிவித்திருக்கிறார்.

'மருது' படத்தைத் தொடர்ந்து 'கத்தி சண்டை' படத்தில் நடித்து வருகிறார் விஷால். அப்படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் 'துப்பறிவாளன்' படத்திலும், 'டெம்பர்' ரீமேக்கிலும் இந்தாண்டு நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார்.

இப்படங்களின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் பாலா இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஷால்.

SCROLL FOR NEXT