சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் புதிய படம், விண்வெளியைக் கதைக்களமாகக் கொண்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் 'மிருதன்'. லட்சுமி மேனன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டது.
பிப்ரவரி 19-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், பெரும் வசூல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் முதல் வாரத்தில் ரூ.10.66 கோடியும், தமிழ்நாட்டு வசூல் இணைத்து உலகளவில் ரூ.20.13 கோடியும் வசூல் செய்தது.
இப்படக் கூட்டணியான சக்தி செளந்தர்ராஜன் - ஜெயம் ரவி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
தமிழ் திரையுலகில் இதுவரை அதிகம் வராத கதைக்களமான விண்வெளியைப் பின்புலமாக கொண்டு கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன். இதனை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். திரைக்கதை வடிவம் கொடுக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் முடிந்தவுடன் ஜெயம் ரவி உடன் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்பதற்கான தேர்வு பணி நடைபெறும் என்று படக்குழு தெரிவித்தது.