நேர்மையான போலீஸ் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் 1998-ல் தேர்வாகி காவல் பயிற்சிக்கு வருகிறார் அறிவு (விக்ரம் பிரபு). அவருடன் தேர்வானவர்கள் தவிர, 1983-ல் தேர்வாகியும் பயிற்சி பெற முடியாத, நடுத்தர வயதுடைய 100 பேரும் அங்குபயிற்சிக்கு வருகின்றனர். இந்த இரு குழுவினரும் ஈவு இரக்கமற்ற பயிற்சி அதிகாரியான ஈஸ்வரமூர்த்தியின் (லால்) ஸ்குவாடுக்கு வந்துசேர்கின்றனர். பயிற்சிக்கு வந்த வயதானவர்களை அவர் விரட்ட நினைக்கிறார். அவர்களுக்குஆதரவாக நிற்கும் அறிவு மீதும், அவரது குழுவினர் மீதும் ஈஸ்வரமூர்த்தியின் ஈகோ, கடும் கோபமாக குவிகிறது. இந்த அதிகார மோதலில் இருந்து அறிவு, அவரது குழுவினர் தப்பினரா, இல்லையா? என்பதை உச்சி வெயிலில் புழுதி பறக்க சொல்கிறது கதை.
விதவிதமான போலீஸ் கதைகளை பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு வேறொரு பரேட் எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ். அறிவு கதாபாத்திரத்தில் வரும் விக்ரம் பிரபு, சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார். ‘‘இங்க ஆர்டர் மட்டும்தான். எவனும் கேள்வி கேட்கக் கூடாது’’என்று ஆணையிட்டாலும், எதிர்த்து புகார் கூறுவது, அதற்கான தண்டனையை எதிர்கொள்வது என ஹீரோயிசம் செய்ய வாய்ப்பிருந்தும் அதை இயல்பாகவே கடக்கிறார்.
முரட்டு ஈஸ்வரமூர்த்தியாக லால். பார்வையிலேயே தனது கோபத்தை தீயாக கொட்டுகிறார். ‘‘நீ என்ன ஜாதி?’’ என்று கேட்கும் தோரணை, கிண்டலாக பேசியவனை மண்ணில்தள்ளி மிதித்து துவைப்பது என அவரது அறிமுக காட்சியே அச்சம் தருகிறது.
அதிகாரத்துக்கு முன்னால் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எம்.எஸ்.பாஸ்கர் மனதில் பதிகிறார். இழிவாக திட்டிய உயர் அதிகாரியை அடித்ததால், கடைசி வரை எஸ்.ஐ. ஆக முடியாமல் தவிக்கும் கதாபாத்திரம். அந்த வேதனையையும், ‘‘ஈஸ்வர மூர்த்தி, முத்துப்பாண்டியை மீறி இங்க எதுவுமே நடக்காது’’ என்கிற இயலாமையையும் தனது தேர்ந்த நடிப்பின் வழியே கடத்துகிறார்.
அஞ்சலி நாயருக்கு அதிக வேலையில்லை. நாயகன் படும் துன்பத்தை நினைத்து பரிதாபப்படுவதும், தூரத்தில் நின்று அவரை பார்ப்பதுமாக வந்து போகிறார். அதிகாரியாக வரும் மதுசூதனன், நல்ல போலீஸாக வரும் போஸ் வெங்கட், சித்தப்பா பிரகதீஸ்வரன் என துணை கதாபாத்திரங்களில் வருவோரும் கச்சிதமான தேர்வு.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும், ஜிப்ரான்இசையும் படத்தை தொய்வடைய விடாமல் நிமிர்ந்து நிற்க வைக்கின்றன. ‘‘இந்த சிஸ்டம்,மொரட்டு வெள்ளக்காரனுக்கும் முட்டாள்தனமான அரசியல்வாதிக்கும் பிறந்த குழந்தைடா’’, ‘‘அதிகாரம் இல்லாத உணர்ச்சி உன்னை எரிச்சுக் கொன்னுடும்’’, ‘‘150 வருஷமா சீருடையக்கூட மாத்தாத டிபார்ட்மென்ட்டோட சட்டத்தை மாத்தப் போறேன்னு வந்து நிற்கிற’’ என்பதுபோன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
முதல் பாதிவரை வேகமாக செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியில், கொஞ்சம் ஊர்ந்து செல்கிறது. பரேட், பரேட் என, மைதானத்தின் புழுதி நம் முகத்திலும் தெறிக் கிறது. ஒட்டவே ஒட்டாத காதல், பார்த்துப் பழகிய பிளாஷ்பேக் போன்றவை இருந்தாலும் காவல் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் அதிகார அத்துமீறல்கள், அதிகாரிகளின் ஈகோ மோதலைத் துணிந்து தோலுரித்துக் காட்டிய விதத்தில் ஈர்க்கிறான் இந்த டாணாக்காரன்!