"பான் இந்தியா திரைப்படம் என்பது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களால் ரசிக்கப்பட வேண்டும். அப்படியிருந்தால்தான் அது பான் இந்தியா படம்" என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 'கற்றது மற' படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ஆர்.வி.உதயகுமார், ''பான் இந்தியா என்ற பெயரில் இன்று பல்வேறு படங்கள் வெளியாகி வருகின்றன. இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட ஒரே காரணத்துக்காக மட்டுமே ஒரு படம் பான் இந்தியா அந்தஸ்தை பெற்றுவிடாது. மாறாக, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களால் அது ரசிக்கப்பட்டால் மட்டும்தான் அது பான் இந்தியா அந்தஸ்தை பெறும்.
நடிகர்களைக் காட்டிலும் ஒரு படத்துக்கு கதைதான் மிகவும் முக்கியம். கதைதான் ஹீரோ. உலகம் முழுக்க ரசிக்கும்படியான திரைப்படங்கள் உருவாக வேண்டும். இயக்குநர்கள் கதையில் கவனம் செலுத்த வேண்டும். இன்று திரைப்படங்களை செல்போனில் பார்த்து வருகிறோம். இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்து 25 ரூபாயில் ஒரு படத்தை பார்க்கும் வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றைக்கு திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து பணத்தை பெறுவது தயாரிப்பாளர்களுக்கு கடினமாக உள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.