பெண்களுக்கான நவீன ஆடைகளை வடிவமைத்து அதன்மூலம் தொழிலதிபராக உயர்கிறார் சத்யா (அசோக் செல்வன்). அவர், திருமணத்துக்கு முன்னும் பின்னும் இருவேறு பெண்களுடன் நெருக்கமாக ஓர் இரவைக் கழிக்கிறார். அந்த இரவுகள் விடியும்போது இடிபோல் பிரச்சினை அவரைத் தாக்குகிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது கதை.
2010, 2020 ஆகிய இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் ஒரே மனிதனுக்கு வெவ்வேறு சூழல்களில் நிகழும் ஒரே மாதிரியான அனுபவத்தை, ஒரே சமயத்தில் ‘இடை வெட்டு’கள் மூலம் மாற்றி மாற்றிக் காட்டுகிறார்கள். இருப்பினும் திரைக்கதையைக் குழப்பமோ, தொய்வோ இல்லாமல் நகர்த்திச் சென்றிருக்கிறார் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபு படம் என்றாலே குறைந்தபட்சக் கலகலப்பை எதிர்பார்த்துச் செல்லலாம். ஆனால், இந்தப் படத்தில் அது வறண்ட பாலை நிலம்போல் ஆகிவிட்டது. நாயகனுடன் இரவைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டுபெண்களுடைய அங்கங்களை நெருக்கமாகக் காட்டும் கேமரா கோணங்கள், அதை மேலும் ஊக்குவிக்கும் பின்னணி இசை (பிரேம்ஜி அமரன்) என, படம் முழுவதும் பெண்களை வெறும் உடலாகவே சித்தரிக்கிறது இந்த சராசரி சினிமா.
வீட்டுக்குள் தனிமையில் இருக்கும் ஆணும் பெண்ணும் உரையாடுவதாகவே முதல் பாதியின் பெரும்பகுதி கழி கிறது. அதனால் ஏற்படக்கூடிய அலுப்பை இளமை ததும்பும் வசனங்கள் ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்கின்றன. அடல்ட் காமெடி இடைவேளைக்குப் பிறகு க்ரைம் த்ரில்லராக மாறிவிடுகிறது. ஆனால் அதற்குத் தேவையான விறுவிறுப்போ சுவாரஸ்யமோ காட்சிகள், கதாபாத்திர வார்ப்பு இரண்டிலுமே இல்லை.
நாயகனாக அசோக் செல்வன் ஏற்கத்தக்க வகையில் நடித்துள்ளார். நெருக்கடியில் மாட்டிக் கொண்ட பதட்டத்தையும் ஏமாற்றப் பட்ட உணர்வையும் நம்பகமாக வெளிப்படுத்தியுள்ளார். துணிச்சலான வேடத்தை ஏற்று, இயன்றவரை அதை கண்ணியமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சம்யுக்தா ஹெக்டே. ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் இருவரும் கதாபாத்திரத்துக்குத் தேவையானதைத் தந்திருக்கிறார்கள்.
‘மாநாடு’ படத்தில் சிறுபான்மையினர் அரசியல் ஆதாயத்துக்காக பலியாக்கப்படுவதைச் சாடி தன்னுடைய சமூக அக்கறையை மெச்சத்தக்க வகையில் காட்டிய வெங்கட் பிரபு, இந்தப் படத்தின் அதைப் பற்றிக் கண்டுகொள்ளாதது இப்படத்தின் கதைக்கான நியாயமாகக் கூட அமையவில்லை. மன்மத லீலை, முழுமை பெறாத அரைகுறை.