தமிழ் சினிமா

உல்டா ஐடியா: பேய்களை அச்சுறுத்தும் நாயகனாக சந்தானம்!

ஸ்கிரீனன்

சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் 'தில்லுக்கு துட்டு' படத்தின் கதைக்களம் குறித்து படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தைத் தொடர்ந்து 'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் 'தில்லுக்கு துட்டு' என்னும் படத்தில் நடித்திருக்கிறார் சந்தானம்.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார் சந்தானம். தீபக் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைத்து வருகிறார். சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் முதல் பேய் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து இறுதிகட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் கதைக்களம் குறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, "இதுவரை தமிழ் சினிமாவில் பேயைப் பார்த்து நாயகன் பயப்படுவார், பின்பு ஒரு கட்டத்தில் அப்பேய் யாருடைய உடம்பிலாவது புகுந்துக் கொள்ளும் இப்படி தான் கதைக்களம் இருக்கும். ஆனால், 'தில்லுக்கு துட்டு' கதைக்களமே புதுமையானது. சந்தானத்தைப் பார்த்தாலே பேய்கள் எல்லாம் பயப்படும். அது ஏன் என்பது தான் படத்தின் கதைக்களம். கண்டிப்பாக காமெடிக்கு உத்தரவாதம் என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும்" என்று தெரிவித்தார்கள்.

'தில்லுக்கு துட்டு' படத்தைத் தொடர்ந்து 'சர்வர் சுந்தரம்' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சந்தானம்.

SCROLL FOR NEXT