வேட்டைத் தொழில் தடை செய்யப்பட்டுவிட்ட சூழலில், பிழைப்புக்காக கள்ளத் துப்பாக்கிதயாரித்துக் கொடுக்கும் தொழிலில் ஈடுபடுகிறான் வேட்டைக்கார குடும்பத்தை சேர்ந்த வேலு(கரு.பழனியப்பன்). அதுவும் தடைபட, வாழ்வாதாரத்துக்காக, கூட்டாளிகளின் தூண்டுதலால் கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில் சில கொலைகளையும் செய்துவிடுகிறான். ஒரு குற்றம் இன்னொரு குற்றத்துக்கு இட்டுச் செல்ல,விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்படுகிறான். அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்கிற நிலையில், தனது காதலியை (நிகிதா) பாதுகாக்கும் நோக்கத்துடன் சிறையில்இருந்து தப்பிக்கிறான். தப்பிக்க உதவிய கூட்டாளிகளின் வற்புறுத்தலால், கடைசியாக ஒருகொள்ளைத் திட்டத்துக்கு வேலு சம்மதிக்கிறான். அந்த திட்டம் அவர்கள் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களுக்கு வித்திடுகிறது. அதில், வேலுவுக்கும், அவனது காதலி தாமரைக்கும் என்ன ஆனது என்பது மீதிக் கதை.
பத்திரிகையாளர், எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ள இப்படம், குற்றங்களை விவரிப்பதைவிட, குற்றம் நிகழும் சூழலை அழுத்தமாகப் பேசுகிறது. அடிப்படையில், பிறருக்கு தீங்கு நினைக்காதவனாக இருக்கும் நாயகன், தவிர்க்க முடியாத சூழலில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது, அதற்காக சிறைபடுவது, ஒரு பெண்ணின் அப்பழுக்கற்ற காதலைப் பெற தகுதியானவனாகத் திகழ்வது, தன்னை நம்பி வந்தவளுக்காக சிறையில் இருந்து தப்பிப்பது, அதற்கு பிந்தைய குற்றச் செயல்களில் குறைந்தபட்ச அறத்தைப் பேணுவது என முதன்மைகதாபாத்திரத்தின் வாழ்க்கையை கச்சாத்தனமாக அணுகியுள்ள படத்தின் முதல் பாதியில், கவனம் சிதறாத வகையில் அனைத்தும் சரியாக அமைந்துள்ளன.
தந்தையால் வளர்க்கப்பட்ட நாயகனுக்கும், தந்தை ஸ்தானத்தில் இருப்பவரிடம் இருந்து காப்பாற்றப்பட்ட நாயகிக்கும் கையறு நிலையில்முகிழும் உறவு கவித்துவமாக சித்தரிக்கப்படுகிறது. அந்த உறவு, ஆண் - பெண் உறவில்இருக்கவேண்டிய பரஸ்பர அன்பு, கண்ணியம், சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக எழுதப்பட்டிருப்பது இயக்குநரின் முதிர்ச்சியான பாலின அரசியல் பார்வையை வெளிப் படுத்துகிறது.
கரு. பழனியப்பன், நிகிதா ஆகியோர் தங்கள்கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிகையின்றி நடிக்கின்றனர். நமோ நாராயணா, சவுந்தர்ராஜா, கரு. பழனியப்பனின் கூட்டாளிகளாக வரும் புதுமுகங்கள் ஆகியோர் குறை சொல்ல முடியாத வகையில் நடிக்கின்றனர். நமோ நாராயணாவின் மனைவியாக வரும் மாயாசந்திரனின் நடிப்பு அருமை. கே-யின் பின்னணி இசை, காட்சிகளுக்கு வலுவூட்டுகிறது. எம்.எஸ்.பிரபு, கோபி ஜகதீசனின் ஒளிப்பதிவு படத்தின் உணர்வை சரியாகக் கடத்துகிறது.
படத்தின் தொடக்கத்தில் வரும் வேட்டையாடும் காட்சிகள் உரிய தாக்கத்தை ஏற்படுத்ததவறுகின்றன. கதை நகர்வில் எளிதாக புரிந்துவிடும் விஷயங்களை நாயகனின் வாய்ஸ் ஓவர்மூலம் சொல்வதைத் தவிர்த்திருக்கலாம்.
இறுதிக் கட்டத்தில் சில எதிர்பாராத திருப்பங்கள் இருந்தாலும், அவற்றையும் சாதாரணமாகவே கடக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற குறைகளால், பல நிறைகள் இருந்தும் ஒரு கேளிக்கை திரைப்படம் என்னும் அளவில் உள்ளத்தை முழுமையாக கொள்ளை கொள் ளத் தவறுகிறான் இந்த ‘கள்ளன்’.