அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹியூமா குரோஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வலிமை’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்களுக்கு இடையே, நல்ல வசூலையும் பெற்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அஜித்தின் அடுத்த படமான ஏகே61-ஐயும் ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். இதனையும் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள். படத்தின் முதல்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், அஜித்தின் அடுத்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும், பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் வில்லன் வேடத்தில் நடிக்கலாம் என்றும், அந்தத் தகவலில் சொல்லப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் ’வலிமை’ படத்தில் 'வேற மாதிரி' என்ற பாடலை விக்னேஷ் சிவன்தான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.