தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவிடம் கட்ட ரூ.1 கோடி ஒதுக்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், ‘மெல்லிசை மன்னர்’ என்று போற்றப்படுபவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பல்வேறு மொழிகளில் 1,500 படங்களுக்கு இசையமைத்த அவருக்கு நினைவிடம் கட்ட ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளதாக கேரள அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதில், கலைத்துறையின் கலைகளில் சிறந்த விளங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அதன்படியே, பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமப் பகுதியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவிடம் கட்டப்படும் என்றும் அதற்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் (1928) ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 4 வயதில் தந்தையை இழந்தவர், கண்ணனூரில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பள்ளி படிப்பைக் கூட முடிக்கவிட்டாலும், தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்று நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். 13 வயதில் மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.
நடிகர், பாடகராக வரவேண்டும் என்பது அவரது விருப்பம். அது நிறைவேறவில்லை. சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்தார். பிறகு, இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் இவர் ஆர்மோனியக் கலைஞராகவும், டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகவும் சேர்ந்தனர். 1953-ம் ஆண்டு வெளியான ‘ஜெனோவா’ படத்துக்காக முதல் முறையாக இசையமைத்தார்.
மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களை தன் இசையால் மகிழ்வித்தவர் கடந்த 2015ல் காலமானார்.
இந்தநிலையில் தான் அவரை கௌரவப்படுத்தும் வகையில் நினைவு மண்டபம் கட்ட கேரள அரசு முடிவு செய்து முதற்கட்டமாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.