விஜய் நடித்திருக்கும் 'தெறி' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'தெறி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் ஆகியவற்றுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து தணிக்கைக்காக பதிவு செய்திருந்தார்கள்.
சில நாட்களாக 'தெறி' தணிக்கைச் செய்யப்பட்டு என்றும் 'யு' சான்றிதழ் என தகவல்கள் வெளியாகின. இன்னும் தணிக்கை அதிகாரிகள் படத்தைப் பார்க்கவில்லை என்று படக்குழு தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 2) 'தெறி' படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கினார்கள். இதனை படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது.
ஏப்ரல் 14-ம் தேதி இப்படத்தை வெளியிடும் முனைப்பில் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறது படக்குழு. மேலும் இதுவரை விற்காத விநியோக உரிமையைக் கைப்பற்ற விநியோகஸ்தர்கள் போட்டியிட்டு வருகிறார்கள்.