விஜய் நடிக்கவுள்ள ‘விஜய் 66’ படத்தின் ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் இந்தப் படத்தினை வம்சி இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
விரைவில் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக படபூஜையை நடத்த முடிவு செய்துள்ளார் தில் ராஜு. இதன் தமிழ் வசனங்களை ராஜுமுருகன் எழுதி முடித்துவிட்டார்.
தற்போது இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யுடன் நடிக்கும் இதர நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகின்றன. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தினை ’விஜய் 66’ என அழைத்து வருகிறார்கள்.