ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கபாலி' படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'. தாணு தயாரித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மும்முரமாக நடைபெற்றது.
இன்னும் படத்தின் 3 முதல் 4 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது என்று இயக்குநர் ரஞ்சித் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். எடிட்டராக பணிபுரிந்து வரும் ப்ரவீன் "முதல் பாதி எடிட்டிங் முடிந்துவிட்டது" என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
"மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் 'கபாலி' வெளியாகும்" என்று விமானநிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.