தமிழ் சினிமா

சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக ஐ.டி. சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக நேற்றும் சோதனை நடத்தினர். இதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோ, விண்ணைத் தாண்டி வருவாயா படங்களின் தயாரிப்பாளரும், `முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் இயக்குநருமான எல்ரெட் குமார், தனது வருமானத்தை குறைத்துக் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் எல்ரெட் குமாருக்குச் சொந்தமாக, சென்னை தியாகராய நகரில் உள்ள வீடு, அவரது கட்டுமான நிறுவனம், சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல, எல்ரெட் குமாரின் நண்பர் மற்றும் தொழில் பங்குதாரர் எனக் கருதப்படும், ஃபைனான்சியரான புரசைவாக்கம் சுரேஷ் லால்வானியின் வீடு, ஃபைனான்ஸ் நிறுவனத்திலும் 2-வது நாளாக நேற்று சோதனை நடத்தப்பட்டது. மேலும், அவரது மகன் வீடு மற்றும் நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு சொந்தமான வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், குவாரிகளில் 2-வது நாளாக நடந்த சோதனையில், கணக்கில் வராத பணம், தங்க நகைகள், வெளி நாடுகளில் வாங்கியுள்ள சொத்துகளின் ஆவணங்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

திமுக பிரமுகர் வீட்டில்...

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஏ.வி.சாரதி. இவர், சிமென்ட் விற்பனை, நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், கல் குவாரி உள்ளிட்ட தொழில்களை நடத்தி வருகிறார்.

அதிமுகவில் இருந்த அவர், 6 மாதங்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். இவரது வீடு, அனந்தலை பகுதியில் உள்ள கல் குவாரி மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. அதேபோல, ஏ.வி.சாரதிக்கு சொந்தமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதில், வருமான வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஆற்காட்டில் உள்ள ஏ.வி.சாரதியின் வீட்டில் 2-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இரவு 7 மணி வரை சோதனை நீடித்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

SCROLL FOR NEXT