நான் பணம் சம்பாதிக்க குற்றப்பரம்பரையை எடுக்கவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
இயக்குநர் பாரதிராஜா நடித்து, இயக்கவிருக்கும் 'குற்றப்பரம்பரை' படத்தின் பூஜை உசிலம்பட்டியில் நடைபெற்றது. அப்படப் பூஜையில் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் கலந்து கொண்டு பாரதிராஜாவுக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து இயக்குநர் பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து இயக்குநர் பாரதிராஜாவும் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இப்படம் குறித்து இயக்குநர் பாலா இதுவரை எந்தவொரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், 'குற்றப்பரம்பரை' படத்துவக்க விழாவில் இயக்குநர் பாரதிராஜா "இது குற்றப்பரம்பரை அல்ல. குற்றம் சுமத்தப்பட்ட பரம்பரை. தாய்ப்பால் குடித்து வளர்ந்ததை எப்படி மறக்க முடியாதோ, அதே போல் நான் வளர்ந்த அந்த நாளின் நினைவுகளை மறக்க முடியாது. கைரேகைச் சட்டத்தை எதிர்த்து 1920ம் ஆண்டு இறந்த மாயக்காள் உட்பட 16 பேரின் படுகொலையைத் தான், இந்த 'குற்றப்பரம்பரை' சினிமா மூலம் சொல்ல இருக்கிறேன். இது என் மக்களின் சுயமரியாதை.
என் இனிய தமிழ்மக்களே என்று கூறும் ஒவ்வொரு முறையும் நம் ஒட்டுமொத்த தமிழனின் உணர்வுகள் என்னைத் தூண்டும், நான் பணம் சம்பாதிக்க இந்த குற்றப்பரம்பரையை எடுக்கவில்லை. 'குற்றப்பரம்பரை' என்ற படத்தை எடுக்க என்னை கடவுள் நியமித்திருக்கிறார். இப்படத்தை ஒரு சிறப்புமிக்க இலக்கிய காவியமாக மக்களுக்கு அளிப்பேன்" என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
அப்போது பத்திரிகையாளர்கள் "இயக்குநர் பாலா எடுக்க.." என்று கேள்வியை முடிக்கும் முன்பே "நான் மேலே பார்த்து பேசுபவன், கீழே பார்த்து பேசத் தெரியாது" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் பாரதிராஜா.