அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ராஜேஷ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யானை’, டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தினை தயாரித்து வருகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை வெளியிடப்பட்ட டீஸர், 2 பாடல்கள் ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே, ‘யானை’ படத்தினை வெளியிடச் சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருந்தது படக்குழு. தற்போது மே 6-ம் தேதி ‘யானை’ வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்குத் தகுந்தாற்போல் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.