கான் திரைப்பட விழாவில் திரையிட ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகம் வெளியீட்டுக்குப் பிறகு, இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் வெளியீடு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இந்தப் படத்தினை கான் திரைப்பட விழாவில் திரையிடப் படக்குழு தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குத் திரையிடப்பட்டால் உலக அளவில் படத்தினை விளம்பரப்படுத்தி விடமுடியும் என்று எண்ணுகிறது படக்குழு.
மேலும், தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் படத்தினை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இதற்கான பணிகள் துரிதமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் கிராபிக்ஸ் பணிகள் மும்பையில் பல்வேறு நிறுவனங்களிடம் கொடுத்துள்ளார்கள். அதனை மணிரத்னம் பார்த்து இறுதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.