தமிழ் சினிமா

நடிகர் விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் என எல்லா தேர்தல்களிலும் வாக்களிக்கும் கடமையை நடிகர் விஜய் தவறாமல் செய்து வருகிறார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு விஜய் சைக்கிளில் வந்தது அதுவும் கருப்பு, சிவப்பு நிற சைக்கிளில் வந்தது பெரும் விவாதப் பொருளானது. இந்நிலையில் விஜய் இன்று சிவப்பு நிற ஆல்டோ காரில் வாக்குச்சாவடிக்கு வந்தார்.

அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொள்ள யாரிடமும், எதுவும் பேசாமல் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிச் சென்றார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 129 பேர் வெற்றி பெற்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT