‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் ட்விட்டர் பதிவில், தயாரிப்பாளர் லலித் குமாரை தவிர்த்து விட்டதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து மீது சர்ச்சை எழுந்தது. இதன் தொடர்ச்சியாக, தற்போது தயாரிப்பாளருக்கு அஜய் ஞானமுத்து நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இப்படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இதனை லலித் குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
இதனிடையே, ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுவிட்டதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து சமீபத்தில் தனது ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில் விக்ரம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்த அஜய் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர் லலித் குமாருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்று சர்ச்சை உருவானது. இதனைத் தொடர்ந்து பலரும் அஜய் ஞானமுத்துவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
அதன்பிறகு அஜய் ஞானமுத்து பதிவிட்டிருந்த ஒரு ட்வீட்டில் “குழு என்றால் அது தயாரிப்பாளரும் சேர்ந்துதான். நான் என்றும் அவரை கைவிடவில்லை” என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்த போது தயாரிப்பாளர் லலித் குமார் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் லலித் குமார் தனக்கு கேக் ஊட்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர் “ஏராளமான பயணங்கள், எண்ணற்ற போராட்டங்கள், ஆனால் நீங்கள் அனைவரும் உறுதியான தூண்களைப் போல நின்றீர்கள். இந்த இளம் குழுவின் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு, உங்கள் மீதான் எங்கள் அன்பையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்த ‘நன்றி’ என்ற ஒரு வார்த்தை போதாது லலித் சார்” என்று கூறியுள்ளார்.