அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, பிங்க்வில்லா தளத்துக்கு பேட்டியளித்த வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று வலிமை இரண்டாம் பாகம். "இதற்குமுன் வலிமை இரண்டாம் பாகம் பற்றி நாங்கள் ஒருபோதும் சிந்திக்கவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் எழுந்த கோரிக்கைகளை படித்த பிறகு, அந்த எண்ணம் இப்போதும் எனக்கும் உள்ளது. இதே என்ன ஹெச்.வினோத்துக்கு ஏற்பட்டிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ரசிகர்கள் விரும்புவதைப் போல வலிமை படம் இருக்கும். இரண்டாம் பாகம் ரசிகர்கள் கையில் தான் உள்ளது. அவர்கள் எதிர்பார்த்ததை படம் பூர்த்தி செய்தால், நிச்சயம் இரண்டாம் பாகம் வரும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, "வலிமை திரைப்படத்தை ஒரு வரியில் விவரிக்க முடியாது. இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த திரைப்படம். குடும்பம் , நட்பு, மேலும் நிறைய ஆக்ஷன் என வணிக சினிமாவை மேலும் சுவாரஸ்யமாக்கும் அனைத்து கூறுகளும் இதில் உள்ளன" என்று தெரிவித்துள்ளார். அதேபோல், தொடர்ச்சியாக "அஜித்துடன் நான்காவது படத்திலும் இணைவேன்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் போனி கபூர்.