ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் படத்தில் பல்ராம் நாயுடு வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து ராஜீவ் குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இப்படத்தில் தெலுங்கின் முன்னணி காமெடி நடிகர் பிரம்மானந்தம் கமலுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், கமலின் மகள் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் கமலின் மகளாகவே நடிக்க இருக்கிறார். பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. லைக்கா நிறுவனம் வழங்க, கமலின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் கமல் தனது முந்தைய படங்களில் உள்ள கதாபாத்திரங்களைக் கொண்டே இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து படக்குழுவினர் தரப்பில் விசாரித்த போது கமல்ஹாசன் 'தசாவதாரம்' படத்தின் பாத்திரமான பல்ராம் நாயுடு வேடத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்றார்கள்.
நாளை (ஏப்ரல் 29) நடைபெற இருக்கும் பூஜையில் நடிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.