‘வலிமை’ திரைப்படம் அஜித்தின் முதல் 'பான் - இந்தியா' படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் போனு கபூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் அளித்த ஒரு பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியது: "படம் தொடங்கியதிலிருந்தே பொருளாதார ரீதியாகவும், படப்பிடிப்பு நடத்துவதிலும் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன. ஆனால், இயக்குநருக்கு அவர் விரும்பிய அனைத்தும் நடக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இன்னும் சொல்லப்போனால் நான் வேறு நான்கு படங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். இது போன்ற சவால்களை எதிர்கொள்ள அனைத்து தயாரிப்பாளர்களும் தயாராக இருக்க வேண்டும்.
ஓடிடி வெளியீடு என்பது இப்போது நம்முடைய வருமானத்தின் ஒரு பகுதி. அதன் மூலம் ஏராளமான பார்வையாளர்களை சென்றடைய முடியும். ஆனால் குறிப்பிட்ட சில படங்கள் பெரிய திரைகளுக்காகவே எடுக்கப்படுபவை. ‘வலிமை’ அப்படியான ஒரு படம். திரைப்படங்கள் திரையரங்குகளில் பார்ப்பதற்காகவே என்று ஆழமாக நம்புபவன் நான்.
என் மனைவி ஸ்ரீதேவி தன்னுடைய திரைப்பயணத்தை தமிழ் மற்றும் தெலுங்கிலிருந்து தொடங்கியவர் என்பதால் தென்னிந்திய மொழிப் படங்களை தயாரிக்க அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஒரு தயாரிப்பாளராக என்னுடைய முதல் படம் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’. அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு எங்கள் இருவருக்குமே திருப்திகரமாக இருந்தது. அதனால்தான் நாங்கள் ‘வலிமை’ படத்தைத் தொடங்கினோம். இப்போது நாங்கள் எங்கள் மூன்றாவது படத்தையும் தொடங்கப் போகிறோம்.
அஜித் மிகவும் பணிவான, தன்னுடைய வேலைகளில் மிகவும் கவனமும் ஈடுபாடும் கொண்டவர். தான் நடிக்கும் படத்தின் மீது அதீத காதல் கொண்ட ஒரு ஹீரோவை பார்ப்பது மிகவும் கடினம்.
‘வலிமை’ அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு திரைப்படமாக இருக்கும். இது அஜித் நடிக்கும் முதல் பான்-இந்தியா படமாக இருக்கும்” என்று போனி கபூர் கூறியுள்ளார்.