வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு.
இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இயக்குநர் கவுதம் மேனன் வடிவேலுவுடன் ஒரு படத்தில் இணைவது குறித்த பேச்சுவார்த்தையில் இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் யூ-டியூப் பக்கத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் இது குறித்துப் பேசிய அவர், “வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறேன். அது ஒரு நகைச்சுவை காதல் படமாக இருக்கும். அவரால் அதை மிகச் சிறப்பாக செய்ய முடியும்.” என்று தெரிவித்தார்.