தமிழ் சினிமா

'கவர்'கள்தான் சாட்சி... 2K கிட்ஸ்களின் காதலுக்கும் கானம் தரும் ராஜா... இளையராஜா! | Valentine's Day 2022

குமார் துரைக்கண்ணு

உலகம் முழுவதும் (பிப்.14) இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதல் என்பது மனம் சார்ந்த ஓர் உணர்வாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. காதலும் காதல் சார்ந்த உணர்வுகளும் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிக் கிடப்பதற்குப் பின்னால் ஹார்மோன்கள், ஆக்சிடோசின் போன்ற மருத்துவ அறிவியல் இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. நமது பண்பாட்டு கலாச்சாரங்களில் காதல் வாழ்வதை விட மடிந்துகொண்டே இருந்தாலும், மீண்டும் மீண்டும் அது உயிர்ப்புடன் துளிர்த்து வரவேச் செய்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் காதலை ஏற்பவர்களுக்கு நிகராக, எதிர்ப்பவர்களும் எக்காலத்திலும் இருக்கின்றனர். 2K கிட்ஸ்களின் ஸ்மார்ட்போஃன் யுகமும் அதற்கு விதிவிலக்கல்ல.

1980-90-களின் இளமைப் பருவத்தைக் கடந்தவர்களின் கதைகளில் கட்டாயம் ஒரு காதல் கதை இடம்பெற்றிருக்கும். ஒன்று அவர்களே காதல் செய்து இருக்கலாம் அல்லது அவர்களைச் சார்ந்த யாராவது ஒருவருக்கு அந்த அனுபவம் வாய்க்கப்பெற்றிருக்கும். அப்படி கடந்தவர்களின் காதலில் கண்ணீர் இருந்ததோ இல்லையோ கட்டாயம் இளையராஜா இருந்திருப்பார்.

அன்றைய காலக்கட்டத்தில் மக்களின் முதன்மைப் பொழுதுபோக்காக இருந்த சினிமாவும், இளையராஜாவின் பாடல்களும் அவர்களது வாழ்க்கையில் பல நேரங்களில் அவர்களுக்கு ஆறுதலாகவே இருந்துள்ளன. குறிப்பாக, இளையராஜாவின் பாடல் இன்றும் 'எவர் லாஸ்டிங்' தன்மையுடன் துணையிருக்கிறது என்பதை டிஜிட்டல் யுகத்து 2K கிட்ஸ்களின் சமூகவலைதளப் பக்கங்களில் இடம்பெற்றிருக்கும் இளையராஜாவின் 'கவர் சாங்ஸ்' உறுதி செய்கின்றன.

கவர் சாங்ஸ்: பெரும்பாலும் ஒரு முழுப் பாடலாக இல்லாமல், பாடலின் குறிப்பிட்ட வரிகள் அடங்கிய சரணத்தை மட்டும் கொண்டவை இந்த கவர் சாங்ஸ். ஸ்மார்ட்போஃன்கள் அதிகரிக்கத் தொடங்கிய காலத்துக்கு முன்பிருந்தே செல்போனில் பாடல் கேட்கும் பழக்கம் அதிகமாகவே இருந்தது. புதிய வகை செல்போன்கள் மாறிமாறி வந்துகொண்டே இருந்தாலும், அதில் பாடல்களைக் கேட்பதற்கான வசதி இல்லாமல் இருந்ததே இல்லை. புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய செயலிகளின் வருகை, இசை மற்றும் பாடல்களை ரசிப்பவர்களின் தேவைகளை இன்னும் எளிமையாக்கின.

அந்த வகையில், 2K கிட்ஸ்களின் ஸ்மார்ட்போஃன்களில் மிக முக்கிய சேமிப்பாக இருப்பவை இந்த கவர் சாங்ஸ்.
80-90களின் இளமைப் பருவத்தினர், தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேசட்களில் பதிவு செய்து கேட்டு மகிழ்ந்ததற்கு ஒப்பானதுதான், 2K கிட்ஸ்களின் கவர் சாங்ஸ் ரசனை.

காதல் உணர்வு சார்ந்தது என்றால், அந்த மெல்லிய உணர்வை மனிதர்களுக்கு இடையே கடத்தும் வல்லமை இசைக்கு உண்டு. அதிலும், இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் இந்த உணர்வு கடத்தலை இன்னும் சுலபமாக்கிவிடுகிறது. அதனால்தான் 2K கிட்ஸ்களின் தவிர்க்க முடியாத கவர் சாங்ஸ்களின் பட்டியலில் இளையராஜாவின் காதல் பாடல்கள் நிறைந்து கிடக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான்,அனிருத், ஜி.வி, டி.இமான், யுவன் என எத்தனையோ இசையமைப்பாளர்கள் 2K கிட்ஸ்களின் பாடல் தேர்வுகளுக்கான முதன்மையானவர்களாக இருந்தாலும், அவர்கள் காலத்து காதலுக்கும் கானம் படைக்கும் நுட்பம் தெரிந்தவராக இளையராஜா இருந்து வருவதற்கு ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, சமூகவலைதளப் பக்கங்கள் முழுவதும் நிரம்பிக் கிடக்கும் இந்த கவர் சாங்ஸ்கள்தான் சாட்சியாக உள்ளன.

"என்ன சத்தம் இந்த நேரம், ராஜராஜ சோழன், பூவே செம்பூவே, சுந்தரி கண்ணால் ஒரு செய்தி, வளையோசை, தென்றல் வந்து தீண்டும் போது, அந்திமழை பொழிகிறது, மன்றம் வந்த தென்றலுக்கு, இளைய நிலா பொழிகிறது..." - இளையராஜாவின் 2K கிட்ஸ்களின் கவர் சாங்ஸ் பட்டியலில் ரிபீட் மோடு பாடல்களாக உள்ளன.

2K கிட்ஸ்களின் விருப்பத்துக்கு ஏற்ப, யூடியூப், பேஃஸ்புக், இன்ஸ்டா என பல்வேறு தளங்களில் கேரளாவின் தைக்குடம் பிரிட்ஜ் உள்ளிட்ட எண்ணற்ற Music Band-கள் தொடர்ந்து 80-90-ஸ் காலத்தில் பட்டையைக் கிளப்பிய பாடல்களைத் தேடித் தேடி பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்திலும் கூட திரையிசை பிரபலங்கள், வளர்ந்து வரும் பின்னணி பாடகர்கள், தனியார் தொலைக்காட்சி நடத்தும் இசை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள், மேடை மெல்லிசை கலைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இதுபோன்ற கவர் சாங்ஸ்களைப் பாடி, அதை சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிஷா ஜெயசீலன் பகிரும்போது, "இன்று கவர் சாங்ஸ் பாடல் பாடும் பெரும்பாலனவர்களின் முதல் விருப்பத் தேர்வாக இளையராஜா பாடல்கள் இருந்து வருகின்றன. காரணம், அவருடைய இசை வயது வித்தியாசமின்றி ரசிக்கப்படுவதுதான். இசை குறித்து எதுவுமே தெரியாதவர்களுக்குக் கூட, அவருடைய பாடல்களை கேட்டு ரசிக்கின்றனர்.

ஸ்ரீநிஷாவின் கவர் சாங் > இங்கே

என் போன்றவர்களுக்கு ராஜாவின் கவர் சாங்ஸை பாடும்போது, மனதுக்கு இதமானதாகவும், நிறைவாகவும் இருக்கிறது. பேஸ்புக்கில் நான் பாடி பதிவிட்ட "செண்பகமே செண்பகமே" கவர் பாடலுக்கு 4 மில்லியன் வியூஸ் கிடைத்தது. இது ஒருநாள் சும்மா வீட்ல இருந்து, என் போனில் பதிவிட்ட பாடல்தான். அப்போதுதான் தெரிந்தது, ராஜாவின் இசைக்கு இன்றளவும் இருக்கும் வலிமை. அதேபோன்று, நான் பதிவிட்ட "ராசாவே உன்ன காணாத நெஞ்சு" பாடலுக்கு 2 மில்லியன் வியூஸ் கிடைத்தது. இவையெல்லாம் தாண்டி அந்தக் கடவுளின் அருளால் இளையராஜா இசையில் பாடலும் பாடியிருப்பதை நான் எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

ஸ்ரீநிஷா, ஜெகன், திவாகர்

பின்னணி பாடகர், சூப்பர் சிங்கர்ஸ் புகழ் திவாகர் கூறும்போது, "உண்மையில், இளையராஜா பாடல்களில் பொதிந்து கிடக்கின்ற நுட்பம், இசைக்கோர்வை சூட்சுமங்கள், அவை எத்தனை கடினமான கம்போசிங் என்பதெல்லாம் குறித்து 2K கிட்ஸ்களுக்கு பெரிதாக எதுவும் தெரிந்திருப்பது இல்லை. ஆனால், இதுபோன்ற கவர் சாங்ஸ், Unplugged Version-களை இசை கலைஞர்கள் பாடி பதிவிடும்போது, 2K கிட்ஸ்கள் அவரது பாடல்களில் நிறைந்திருக்கின்ற அழகை புரிந்து கொள்கின்றனர்.

எனது வாழ்வில் அவருடைய இசைக்கு பெரும் பங்கு உள்ளது. அவரது பாடல்களைக் கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். இதுபோன்ற கவர் சாங்ஸ்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது, குறிப்பாக ராஜாவின் பாடல்களைப் பாடி பதிவிடுவது எங்களுக்கான மார்க்கெட்டை உயர்த்துகிறது.

திவாகரின் கவர் சாங் > இங்கே

அதையும் தாண்டி, ஒரு மன திருப்தி. அவருடைய இசையில் வெளிவந்த "வெள்ளி நிலவே, வெள்ளி நிலவே" பாடலைப் பாடி யூடியூபில் பதிவிட்டுள்ளேன். காலத்துக்கும் அது அங்கிருக்கும் என்ற மனநிறைவு உள்ளது. அதே நேரத்தில், அவருடைய இசையில் வெளிவந்த பாடல்களை கவர் சாங்ஸ்களாக பதிவிடும்போது, பார்வையாளர்களும் மகிழ்ச்சியடைகின்றனர்" என்றார்.

தஞ்சையைச் சேர்ந்த சாக்ஸபோன், கிளாரிநெட் மற்றும் புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஜெகன் கூறும்போது, "என்போன்ற வளர்ந்து வரும் இளம் இசைக் கலைஞர்களுக்கு, அவரது இசையும் பாடல்களும்தான் வழிகாட்டிகள். மற்ற பாடல்களை வாசிப்பதற்கும் ராஜாவின் பாடல்களை இசைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். மேடைகள் தோறும் இன்றளவும் அவரது பாடல்களை இசைக்கும்போது, ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பு அளவற்றது. தமிழகம் மட்டுமின்றி பல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அவரது பல பாடல்களை கவர் சாங்ஸாக பாடி மகிழ்ந்து வருகின்றனர்.

ஜெகனின் கவர் > இங்கே

அவருடைய பாடல்களை கவர் சாங்ஸாக இசைத்து பதிவிடுவது கூட மனுதுக்கு அத்தனை நிறைவாக இருந்து வருகிறது. பார்வையாளர்களும் அவரது இசையில் வெளிவந்த பாடல்களை இசைக்கும்போது உடனடியாக தங்களது பாராட்டுக்களை ஹார்டின் எமோஜிகளாக அதிகளவில் பதிவிடும்போது மனது அத்தனை சந்தோஷப்படுகிறது" என்றார் பூரிப்புடன்.

உங்களுக்குப் பிடித்த இளையராஜா பாடல்கள், கவர் சாங்ஸ் பற்றி கருத்துப் பகுதியில் பகிரலாமே...

SCROLL FOR NEXT