சினிமா கனவோடு சொந்த ஊரைவிட்டு இடம்பெயர்ந்த நெல்சனுக்கு முதல் படம் பாதியிலேயே டிராப். இன்று அதே நெல்சன் ஸ்டார் நாயகர்களின் ஃபேவரைட் இயக்குநர். தனது நான்காவது படத்திலேயே சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த உயரத்தை எட்ட அவர் கொடுத்த உழைப்புதான் வியக்க வைப்பவை.
நெல்சனின் பூர்விகம் வேலூர். வேலூரில் இருந்து கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு மாறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அசிஸ்டென்ட் ஸ்கிரிப்ட் ரைட்டராக தனது சினிமா கனவை நோக்கி முதல்அடியெடுத்து வைத்தார். படிப்படியாக சில நிகழ்ச்சிகளில் துணை இயக்குநராக பணியாற்றிய நெல்சன், சில ஆண்டுகளில் ஜோடி நம்பர் 1, ஏர்டெல் சூப்பர் சிங்கர், பிக்பாஸ் தமிழ் என ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளின் இயக்குநர், தயாரிப்பு குழுவில் ஒருவர் என பரிணமித்தார்.
சின்னத்திரையில் கொடிகட்டிப் பறந்தாலும் வெள்ளித்திரையில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுநிறைவேற 2010-ல் தொடங்கப்பட்ட சிம்புவின் 'வேட்டை மன்னன்' படம் மூலம் நெல்சனுக்கு வாய்ப்பு வந்தது. சில கட்ட படப்பிடிப்புகளும் முடிந்தன. டீசரும் வெளியாகி தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பையும் பெற்றது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் ஒரு சில காரணங்கள் 'வேட்டை மன்னன்' பாதியிலேயே கைவிடப்படுகிறது. பல ஆண்டு கனவுக்கு விதையாய் தொடங்கப்பட்ட முதல் படம் பாதியிலேயே கைவிடப்பட்டால் அந்த இயக்குநரின் மனநிலை எப்படி இருக்கும். மனநிலையை விடுங்கள், அவரின் எதிர்காலம் என்னவென்று யோசித்து பாருங்கள். அதுவும் எதற்கெடுத்தாலும் சடங்குகள் பார்க்கும் தமிழ் சினிமாவில் அந்த இயக்குநரின் எதிர்காலம் கேள்விக்குறியே.
அப்படியொரு நிலையில்தான் அன்று இருந்தார் நெல்சன். முதல் டிராப்பால், புதிய படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் தனது திரைப்பயணத்தை மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயம். மீண்டும் சின்னத்திரை கதவை தட்டினார். தொலைக்காட்சியில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயத்தில் தான் அனிருத் மூலமாக பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷனுக்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி உருவானதுதான் உருவானதுதான் 'கோலமாவு கோகிலா'. 2018-ல் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் வெற்றி மூலமாக தமிழ் சினிமாவில் தனது காலடியை எடுத்துவைத்தார் நெல்சன். பிளாக் காமெடி ஜானரில் சொல்லப்பட்ட 'கோலமாவு கோகிலா', கமர்ஷியல் தமிழ் சினிமா விரும்பிகளுக்கு புதிய வகை கதை சொல்லாடலை கொடுத்தது.
இதனால் வெளியுலகத்துக்கு தெரிய ஆரம்பித்த நெல்சனின் அடுத்தக் கூட்டணி, அவரின் நண்பர் சிவகார்த்திகேயனுடன் ’டாக்டர்’. 'கோலமாவு கோகிலா'வில் போதைப்பொருள் கடத்தல் என்றால், டாக்டரில் பெண்கள், குழந்தைகள் கடத்தல். சீரியஸான பிரச்சினையான இதனை காமெடியுடன் இணைத்து கொடுத்திருந்தார். விமர்சகர்களால் டாக்டர் கொண்டாடப்படாவிட்டாலும், மக்களால் கொண்டாடப்பட்டது. கரோனா காலத்தில் வெளியான ’டாக்டர்’ சிவகார்த்திகேயனின் சினிமா கரியரில் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் படம் என்ற பெருமையை தேடிக்கொடுத்தது. இந்த இரண்டு படங்களை அடுத்து நெல்சன் மூன்றாவது இணைந்தது விஜய்யின் 'பீஸ்ட்' படத்திற்காக.
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அனிருத் என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள 'பீஸ்ட்' ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படம் வெளியாகும் முன்பே, இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்துள்ளார். சினிமா கனவில் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் விடாது உழைத்த நெல்சன் தனது 4-வது படமே ரஜினிகாந்துடன் என்பது அவரது வளர்ச்சியின் அத்தாட்சியாக இருக்கிறது.
மூன்று ஜெனரேஷன் சூப்பர் ஸ்டார்களான ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் ஒரே மேடையில் தோன்றிய ஒரு அவார்ட் நிகழ்ச்சியை 2016-ல் இயக்குநராக இருந்து இதே சன் டிவிக்காக அதை இயக்கினார் நெல்சன். இன்று அதே நெல்சன் அதே மூன்று ஜெனரேஷன் சூப்பர் ஸ்டார்களையும் தனது நாயகர்களாக இயக்கவுள்ளார். இது வேறு எந்த இயக்குநருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு. நெல்சனின் வளர்ச்சியை அவர் பாணியிலேயே சொல்வது என்றால் வேற மாரி வேற மாரி..!