பணி ஓய்வுபெற்ற அப்பா (நாசர்) மீதான பாசத்தையும், அக்கறையையும், அவரை அதட்டி உருட்டி கட்டுப்படுத்துவதில் காட்டும் மகன் விஜய் (அசோக்செல்வன்).
எவ்வளவு உழைத்தாலும் நிர்வாகம் பணிஉயர்வு தர மறுப்பதாக எண்ணி விரக்தியடையும் ரிசார்ட் ஊழியர் ராஜசேகர் (ஜெய் பீம் புகழ் மணிகண்டன்).
திரைப்பட இயக்குநரான தன் தந்தையின் (கே.எஸ்.ரவிகுமார்) நிழலில் முன்னேற விரும்பாமல், சொந்த திறமையால் வெற்றிபெற விரும்பி,முதல் படத்தை இயக்கிவிட்டுக் காத்திருக்கும் பிரதீஷ் (அபி ஹாசன்).
தனக்கான வாழ்க்கையை வாழாமல், சுற்றி இருப்பவர்கள் தனது லைஃப் ஸ்டைலை பார்த்துவியக்க வேண்டும் என பகட்டாக வாழும் பிரவீன்(பிரவீன் ராஜா).
இவ்வாறு பொருளாதார அடுக்கில் வெவ்வேறு நிலைகளில் வாழும் குடும்பங்களை சேர்ந்தஇந்த 4 பேரையும் ஒரு விபத்து எப்படி புரட்டிப்போடுகிறது என்பதுதான் கதை.
நான்கு முதன்மை கதாபாத்திரங்கள், அவற்றுக்கு நெருக்கமான துணை கதாபாத்திரங்கள், அவற்றின் குணநலன்களை எவ்வித ஆரவாரமும் இல்லாமல் வெகு இயல்பாக அறிமுகப்படுத்துகிறது படம். ஒவ்வொரு கதாபாத்திரமும் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களாக இல்லாமல், நம் மத்தியில் வாழ்பவர்கள் என உணர வைத்ததில் இயக்குநரின் ‘கதாபாத்திர எழுத்து’ முதிர்ச்சியுடன் பளிச்சிடுகிறது.
அக்கறை என்கிற பெயரில் வெளிப்படும் ஈகோ, சுயமதிப்பீடு செய்துகொள்ளாத பொறுப்பின்மை, மூத்த தலைமுறையின் அனுபவத்தைசட்டை செய்யாத மேதாவித்தனம், பொருட்களுடன் வாழ்வதே வாழ்க்கை என நினைக்கும் பகட்டுத்தனம் ஆகிய உணர்வுகள் மீது, ஆர்ப்பாட்டம் இல்லாத விசாரணையை நடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட்.
நாசர் சிறிய கதாபாத்திரம் ஏற்றிருந்தாலும் உலகத்தரமான நடிப்பை வழங்குகிறார். அசோக்செல்வன், ரிஷிகாந்த், ரியா, மணிகண்டன், அபிஹாசன் பிரவீன் ராஜா, ரித்விகா என ஒவ்வொரு நடிகரும் கதாபாத்திரமாக மட்டும் தெரியும் நடிப்பை தருகின்றனர்.
உணர்வுகளால் கட்டியெழுப்பப்படும் படத்தில் பின்னணி இசையின் போதாமை, சில காட்சிகளின் நீளம் என சில குறைகளும் இல்லாமல் இல்லை. ஆனால், முரண்களால் நிறைந்த வாழ்வில் அவற்றை களைந்தெறிய காலம் ஒரு சந்தர்ப்பம் தரும்போது, அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பக்குவப்பட வேண்டும் என்பதை, ஒரு குடும்ப நாவலை வாசிப்பது போன்ற மெல்லிய உணர்வுடன் சொல்லித் தருவதற்காக இப்படத்தை கொண்டாடலாம்.
ஜெயகாந்தன் உயிரோடு இருந்திருந்தால், தனது நாவலின் தலைப்பை சூட்டிக்கொண்டிருக்கும் இப்படம் அதற்குரிய தகுதியுடன் இருப்பதைப் பார்த்து தன்னுடைய மீசையை முறுக்கிவிட்டு பெருமைப்பட்டிருப்பார். வயது வித்தியாசமின்றி குடும்பங்கள் கொண்டாட வேண்டிய மனிதர்கள் இவர்கள்!