'விஜய் 66’ படத்தின் கதையைக் கேட்ட விஜய், '20 ஆண்டுகளாக இப்படி ஒரு கதையை நான் கேட்கவில்லை' என்று கூறியதாக தயாரிப்பாளர் தில் ராஜு தகவல் பகிர்ந்துள்ளார்.
'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். 'தோழா', 'மஹரிஷி' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வம்சி இதனை இயக்கவுள்ளார். இது விஜய் நடிப்பில் உருவாகும் 66-வது படம் என்பதால் 'விஜய் 66' என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘விஜய் 66’ படம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்பேட்டியில் அவர் பேசும்போது, இப்படத்தின் கதையை கேட்ட விஜய் கடந்த 20 ஆண்டுகளாக இப்படி ஒரு கதையை தான் கேட்கவில்லை என்று கூறியதாகவும், இது தனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறியதாகவும் தகவல் பகிர்ந்துள்ளார்.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை வரும் மார்ச் மாதம் தொடங்கி வரும் தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தில் ராஜு கூறியுள்ளார்.
தில் ராஜுவின் இந்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.