இயக்குநர் செல்வராகவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது 3-வது அலை தொடங்கிவிட்டதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.
திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து விட்டனர்.
இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு இன்று (ஜன 23) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 அல்லது 3 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தோர் தயவுசெய்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும். தயவுசெய்து கவனமுடன் இருங்கள். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு செல்வராகவன் கூறியுள்ளார்.