ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கபாலி' படத்தின் டீஸர் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்திற்கு இன்னும் சில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பிற்கு இருக்கின்றன. படத்தின் பிரதான காட்சிகள் அனைத்து முடிந்துவிட்டதால் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரஜினி, கலையரசன் மற்றும் தன்ஷிகா தங்களுடைய டப்பிங் பணிகளை முடித்திருக்கிறார்கள்.
டப்பிங் பணிகள் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வரும் நேரத்தில், படத்தின் டீஸர் வெளியீட்டு பணிகளையும் தயாரிப்பு நிறுவனம் தீவிரப்படுத்தியது. மே 1ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், "’கபாலி’ படத்தின் டீஸர் மே 1ம் தேதி யூடியுப் தளத்தில் பதிவேற்றப்படும்" என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வி.கிரியேஷன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் சந்தோஷத்தில் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.