ரஜினியைப் பற்றி ராம் கோபால் வர்மா கூறியிருக்கும் கருத்துக்களுக்கு ரஜினி ரசிகர்கள் பலர் கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் '2.0' படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் நடித்துவரும் ஏமி ஜாக்சன் அவரோடு செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிந்தார்.
அப்புகைப்படத்தை வைத்துக் கொண்டு முன்னணி இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் "மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் இந்த மனிதர், நட்சத்திர அந்தஸ்துக்கு அழகு முக்கியம் என்ற எண்ணத்தையே தூள் தூளாக்குகிறார். பார்க்க நன்றாக இருப்பவர் அல்ல, சிக்ஸ் பேக்ஸ் கிடையாது, சரியான உடலமைப்பும் கிடையாது, மொத்தம் இரண்டரை நடன அசைவுகள் தான் தெரியும்.
உலகில் வேறெங்கும் இப்படியிருக்கும் ஒருவர் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது. இவர் கடவுளுக்கு என்ன செய்தார், கடவுள் இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையை தந்துள்ளார் என்பது தெரியவில்லை. ரசிகர்களுக்கு திரைப்படத்தில் என்ன பிடிக்கும் என்பதை ஒருவரும் கணிக்க முடியாது என்பதற்கு ரஜினி சார் தான் ஆகச்சிறந்த உதாரணம். உலகின் உயர்ந்த மனோதத்துவ நிபுணர்களும், ரசிகர்களின் இந்த ரஜினி பித்தினை விளக்க முடியாமல் குழம்பிப் போவார்கள்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சமீபத்தில் இதைப் போலவே தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாணைப் பற்றி பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார். பெரும் சர்ச்சை எழவே இனிமேல் பவன் கல்யாணைப் பற்றி ட்வீட் செய்ய போவதில்லை என்று தெரிவித்தார்.
மேலும் ராம் கோபால் வர்மாவின் கருத்துக்களைத் தொடர்ந்து கே.ஆர்.கே என்று அறியப்படும் விமர்சகரும் " பொதுமக்கள் ஒரு அடிமுட்டாள்கள். அதனால்தான் ரஜினிகாந்த் என்ற நடிக்க தெரியாத, நடனமாடத் தெரியாத, சரியான உயரமோ, ஆளுமையோ இல்லாத ஒருவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
ராம் கோபால் வர்மா மற்றும் கே.ஆர்.கே இருவரின் ரஜினியைப் பற்றிய கருத்துக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.