தமிழ் சினிமா

திரை விமர்சனம்: கொம்பு வச்ச சிங்கம்டா

செய்திப்பிரிவு

நவீனத்தின் அனைத்து வசதிகளும் சென்றடைந்த கிராமம் அது. அங்கு,பள்ளிக் காலம் தொடங்கி நண்பர்களாக இருக்கின்றனர் 6 இளைஞர்கள். அவர்களில் ஒருவரான நாயகன் (சசிகுமார்),ஊர்ப் பெரியவரின் (மறைந்த இயக்குநர் மகேந்திரன்) மகன். இந்த 6 பேரும் ‘கடவுளும் இல்லை; சாதியும் இல்லை’ என்ற கொள்கை கொண்டவர்கள். சாதிபேதமற்ற அவர்களது நட்பு, சாதிப் பற்றுகொண்ட சிலரது கண்களை உறுத்துகிறது. இந்த சமயத்தில் உள்ளாட்சித் தேர்தல் வர, 6 பேரும் இரு அணிகளாக பிரிந்துவேறு வேறு கட்சிகளுக்கு வேலை செய்கின்றனர். ஓர் அணியில் உள்ள நண்பன் கட்சிப்பகையால் கொல்லப்படுகிறார்.பின்னர், மற்றொரு நண்பனும் கொல்லப்படும்போது, விலகிய நண்பர்கள் சுதாரிக்கின்றனர். இந்த வன்மத்தின் பின்னால் இருப்பது யார் என்பதை, 3-வது நண்பன் கொல்லப்படும் முன்பு நாயகன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதை.

கிராமத்து கதைக் களங்களில் ஐ.டி. ஊழியராக நடித்தாலுமேகூட, நண்பர்கள் புடைசூழ, காதல் நாடகம் அரங்கேற, முகத்துக்கு முன்னால் சிரித்தபடி வன்மத்துடன் நெருங்கும் வில்லன்களை மோப்பம்பிடித்து அழிக்கும் அசகாய சூரன் கதாபாத்திரத்தில் தோன்றுவதுதான் சசிகுமாருக்கு பிடித்தமான ‘டெம்ப்ளேட்’. இப்படத்திலும் அது மாறவில்லை. வழக்கமான ‘டிரேட் மார்க்’ நடிப்பு. நடிப்பில் புதிய பரிமாணங்களை எப்போது முயற்சிக்கப்போகிறார் என்று தெரியவில்லை. சூரியும் ஒரேமாதிரி உச்சரிப்பு, வட்டார வழக்கு, உடல்மொழி என சுருங்கிவிட்டதால், நகைச்சுவை எதுவும் எடுபடவில்லை.

தமிழ்ச்செல்வியாக வரும் கதாநாயகி மடோனா செபாஸ்டியனுக்கு ஒரு துண்டு கதாபாத்திரம். நல்லவரா, கெட்டவரா எனப் பிரித்தறிய முடியாத வேடங்களில் வரும்இயக்குநர் மகேந்திரனும், ஹரீஷ் பெராடியும் கவனிக்க வைக்கின்றனர்.

தற்கால கிராமங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும், சாதியும்,அரசியலும் எப்படி இரண்டறக் கலந்திருக்கின்றன, சாதிப் பற்று எந்த அளவுக்கு வேரோடிக் கிடக்கிறது என்பதை பின்புலமாக வைத்த வகையில் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனை பாராட்டலாம்.

அதேநேரம், திரைக்கதையில் சுறுசுறுவென கவனம் செலுத்திவிட்டு, அதில் போதிய திருப்பங்களை உள்ளிடாமல் கிளைமாக்ஸ் திருப்பத்தை மட்டும் நம்பி களமிறங்கியுள்ளார்.

‘சுந்தரபாண்டியன்’ எனும் நேர்த்தியான படத்தை கொடுத்தவரா இரட்டைபொருள்படும் பல கொச்சை வசனங்களை எழுதியுள்ளார் என்பதும் ஏமாற்றம்.விடலைச் சிறுவர்களை பள்ளிக்கூடக் காதல் என்ற பெயரில் கொச்சையாக சித்தரிப்பதும் ஏற்கத்தக்கது அல்ல.

நவீன கிராமத்தின் அழகையும், அதற்குள் ஒளிந்துள்ள மர்மங்களையும் தனதுஒளிப்பதிவு மூலம் அட்டகாசமாக காட்சிகளில் கொண்டுவருகிறார் ஏகாம்பரம்.

படத்தின் உள்ளடக்கமும், இயக்குநரின் நோக்கமும், இன்றைய சமூகத்துக்கு தேவைப்படும் மாற்றத்தைப் பேச முயற்சிக்கின்றன. ஆனால், அந்த முயற்சி, சராசரிகிராமத்து கதாநாயக சினிமாவுக்குள் அசட்டு ஹீரோயிசமாக பின்தங்கிவிடுவதில், எதுவும் எடுபடாமல் போகிறது!

SCROLL FOR NEXT