முதல் படைப்புக்கே தேசிய அளவில் அங்கீகாரம் கிடைப்பது என்பது அரிதான ஒன்று. தன் முதல் ஆவணப்படத்துக்கே தேசிய விருதை வென்றிருக்கிறார் சுருதி ஹரிஹர சுப்ரமணியன். கலை மற்றும் பண்பாடு பிரிவில் சிறந்த ஆவணப் படத்துக்கான விருதை வென்ற 'ஏ ஃபார் ஆஃப்டர்னூன்' (A far Afternoon) குறித்து அவரிடம் பேசியதில் இருந்து...
முதல் ஆவணப்படத்துக்கே தேசிய விருது. எப்படி உணர்கிறீர்கள்?
நான் தேசிய விருது வாங்கியிருக்கிறேன் என்பதையே இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. செய்தி வந்ததில் இருந்து தொடர்ச்சியாக போன் கால்கள் வந்துகொண்டே இருக்கிறது. என்னைச் சுற்றி இவ்வளவு அன்பு செலுத்துபவர்கள் இருக்கிறார்களா என்று சிலிர்த்துப் போய்விட்டேன். அனைத்து இயக்குநர்களுக்கும் தேசிய விருது என்பதுதான் ஒரு கனவு. அது எனக்கு முதல் படத்திலே கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.
'ஏ ஃபார் ஆஃப்டர்னூன்' ஆவணப் படம் உருவானதன் பின்னணி...
மற்ற இயக்குநர்கள் போல உதவி இயக்குநராக வேலைப் பார்த்துவிட்டு இயக்குநராக முயற்சி செய்து வந்தேன். நிறைய ஆவணப் படங்கள் பார்க்கும்போது கூட நாமும் ஓர் ஆவணப் படம் இயக்குவோம் என்ற எண்ணம் வரவே இல்லை. என் கதையை தயார் செய்து நிறைய தயாரிப்பாளர்களை சந்தித்து வந்தேன்.
கிஷன் கண்ணா ஒரு ஓவியம் வரைய துவங்கி இருக்கிறார். அது எவ்வளவு நாட்கள் போகும் என்று தெரியாது. ஆனால், அதை நாம் நமது கலை பயன்பாட்டிற்காக பதிவு செய்து வைக்க வேண்டும் என்று நினைத்து என்னை அழைத்தார்கள். நானும் ஒருபுறம் இயக்குநர் வாய்ப்பு தேடினாலும், மறுபுறம் சிறு சிறு விளம்பர படங்களைச் செய்வேன். அதனால் நானும் சரி போகலாம் என்று டெல்லி சென்றேன்.
அங்கு சென்றவுடன் கிஷன் கண்ணா இந்திய கலைகளில் ஒரு முக்கியமான ஓவியர் என்பது தெரிந்தது. 89 வயதிலும் இவ்வளவு பெரிய ஓவியம் வரைகிறாரே என்று எண்ணினேன். அவருடைய ஓவியம் வரையும் கலையே ஒரு தியானம் போல் இருந்தது. ஓவியம் என்பது அனைவருமே ரொம்ப வேகமாக வரைவார்கள் என்று எண்ணுவோம். ஆனால் கிஷன் கண்ணா ரொம்ப பொறுமையாக யோசித்து யோசித்து வரைந்தார்.
அவருடைய வாழ்க்கையில் எவ்வளவு பேரை சந்தித்திருப்பார். நிறைய விஷயங்கள் அவருக்கு தெரிந்திருந்தது. அப்படிப்பட்ட மகத்துவக் கலைஞரின் வாழ்க்கையை பதிவு செய்ததன் விளைவுதான் இந்த ஆவணப் படம்.
நீங்கள் வழக்கமான ஆவணப்பட உத்திகளைக் கையாளவில்லை என்று அறிகிறேன். வித்தியாசம் காட்ட வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமா?
புதுசான விஷயங்கள் சொல்ல வேண்டும் என்று முடிவு பண்ணினேன். அவர் வரைந்து வரும் இந்த ஓவியம் நமக்கு புதுசு என்பதால் அதை முன்னிலைப்படுத்தி அதைச் சுற்றி இவருடைய கதையைச் சொல்லலாம் என்று தீர்மானித்தேன். 89 வயது நிரம்பியவரைப் பற்றி ஓர் ஆவணப் படத்தில் முழுமையாக சொல்லிவிட முடியாது என்பதால், அவர் வரைந்து வரும் ஓவியத்தில் அவருடைய பழைய ஓவியங்களோடு இணைப்பு இருக்கும். இந்த ஓவியம் வரையும் நேரத்தில் கிஷன் கண்ணா யார்? அவருடைய மனதில் தற்போது என்ன போய்க் கொண்டிருக்கிறது? இந்த மாதிரியான நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறேன். வழக்கமாக நீங்கள் பார்க்கும் ஆவணப் படம் போல் அல்லாமல் வித்தியாசமாக காட்சிப்படுத்தி இருக்கிறோம். பின்னணி குரல் எல்லாம் இல்லாமல் அவருடைய தினசரி வாழ்க்கையில் ஓர் யதார்த்தமான பயணமாக இந்த ஆவணப் படம் இருக்கும்.
சினிமா துறையிலும் வீட்டிலும் எந்த மாதிரியான உறுதுணை கிடைக்கிறது?
இந்தச் செய்தி வந்தவுடனே இது உண்மை தானே என்று சரிபார்த்தேன். நிறையப் பேர் எனக்கு சினிமாவில் உதவி புரிந்திருக்கிறார்கள். இயக்குநர்கள் என்று இல்லாமல் பி.சி.ஸ்ரீராம் சார், சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் பேயஸ் என நிறைய பேரால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். இந்த ஆவணப் படம் தொடங்கும் முன்பு எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. அதை எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் சாரிடம் சொன்னேன். அவருக்கு எனக்கு நிறைய விஷயங்கள் சொன்னார். என்னைச் சுற்றி நிறைய நல்ல உள்ளங்கள் இருக்கும் விஷயத்தில் நான் ரொம்ப கொடுத்து வைத்தவள் என நினைக்கிறேன். உன்னால் முடியும் என்று யாராவது சொன்னால் நான் ரொம்ப நம்பிக்கையுடையவளாக மாறிவிடுவேன்.
எனக்கு விருது கிடைத்ததில் என்னை விட என் குடும்பத்தினருக்கு தான் ரொம்ப மகிழ்ச்சி. செய்தியை கேட்டவுடன் துள்ளிக் குதித்து கத்திவிட்டார்கள். என் குடும்பத்தினர் ஊருக்கு இருக்கும் சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் போன் பண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னால் முடிந்தளவிற்கு என் குடும்பத்தினரைப் பெருமைப்படுத்திவிட்டேன் என நினைக்கிறேன். சினிமா துறையில் தொடர்ந்து சிறப்பாக இயங்குவதற்கு போதுமான ஊக்கம் கிடைத்துக்கொண்டிருக்கிறது.
இசைக்கும் விருது....
'ஊருக்கு 100 பேர்', 'மாலினி 22 பாளையங்கோட்டை' மற்றும் தெலுங்கில் 'இஷ்க்' படத்தில் 2 பாடல்கள் ஆகியவற்றில் இசையமைப்பாளர்களாக பணியாற்றியவர்கள் அரவிந்த் மற்றும் ஷங்கர். 2015-ம் ஆண்டிற்கான சிறந்த கலை மற்றும் பண்பாடு பிரிவில் ஆவணப்பட இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார்கள்.
'ஏ ஃபார் ஆஃப்டர்னூன்' படத்துக்காக தேசிய விருது வென்றிருப்பது குறித்து அரவிந்திடம் பேசியபோது, "தேசிய விருது வென்றிருப்பது எங்களுக்கே ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. கிஷன் கண்ணா என்ற ஓவியரைப் பற்றிய ஆவணப்படத்துக்கு கடந்தாண்டு இசையமைத்தோம். நிறைய திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினார்கள். எங்களுக்கு தேசிய விருதுக்கு அனுப்பி இருப்பதே தெரியாது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை.
தனி ஒருவரைப் பற்றிய ஆவணப் படம். நிறைய இசைக் கருவிகள் எல்லாம் இல்லாமல் ரொம்ப கம்மியாக தான் படத்தில் இசையே இருக்கும். 72 நிமிடப் படத்தில் மொத்தமே ஒரு 10 நிமிடங்கள்தான் பின்னணி இசையிருக்கும். நிறைய இடங்களில் பின்னணி இசையே இருக்காது, ஒரு சில இடங்களில் அந்த இடத்திற்கான சத்தங்கள் மட்டும் இருக்கும். அமைதியான இடங்கள் தான் நிறைய தாக்கத்தை உண்டாக்கும்.
நிறைய அமைதிக்குப் பின் வரும் இசைக்குதான் ரொம்ப தாக்கம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். கமர்ஷியலில் படங்களில் தொடர்ச்சியாக பின்னணி இசை இருந்து கொண்டே இருக்கும். பார்ப்பவர்களுக்கு ரொம்ப சத்தமாக இருக்கும். 'அமைதிதான் இசையின் ஒரு முக்கியமான அங்கம்" என்று ஒரு இசையமைப்பாளர் கூறியிருக்கிறார். இசை என்பது ஒரு 7 ஸ்வரங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி தான். இந்த தத்துவத்தில்தான் நான் இசையமைத்து வருகிறேன்" என்று தெரிவித்தார்.
குடும்பத்தில் என்ன சொன்னார்கள் என்பதற்கு, "அம்மா, அப்பா, மனைவி உள்ளிட்ட அனைவருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். நானே எதிர்பார்க்காத போது, அவர்களிடம் சொன்னவுடன் அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
நிறைய சாதிக்கணும். இசையில் ஒரு முடிவு என்பது கிடையாது. இந்த விருது, பணம் எல்லாவற்றையும் தாண்டி பணியாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நிறைய படங்கள், ஆல்பங்கள் பண்ணனும். இளையராஜா சார் மற்றும் ரஹ்மான் சார் இருவருமே எங்களுக்கு உத்வேகம் அளிப்பவர்கள். அவர்களால் மட்டுமே தமிழ் இசையுலகிற்குள் நுழைந்தோம். இப்போது சந்தோஷ் நாராயணன் மற்றும் கே இருவரின் இசை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்" என்றார் அரவிந்த்.