சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா நிறைவு நிகழ்ச்சியில் மூத்த இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவருடன், பிற பிரிவுகளில் விருது பெற்ற இயக்குநர்கள் வசந்த் எஸ்.சாய், பா.ரஞ்சித், கணேஷ் விநாயக், தமிழ், பாடகர் சித்ராம், திரைப்பட விழா இயக்குநர் இ.தங்கராஜ், இணை இயக்குநர் முரளி, அக்கார்ட் ஹோட்டல் குழுமத் துணைத் தலைவர் அருண் உள்ளிட்டோர்.படம்: பு.க.பிரவீன் 
தமிழ் சினிமா

19-வது சர்வதேச திரைப்பட விழா நிறைவு - ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்துக்கு விருது

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’, ‘தேன்’, ‘சேத்துமான்’ ஆகியவை சிறந்த படங்களுக்கான விருது பெற்றன.

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் சென்னை சர்வதேச திரைப்பட விழா 2003-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில், சர்வதேச மற்றும் இந்தியாவின் சிறந்த படங்கள் திரையிடப்பட்டு, சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 19-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 30-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், 53 நாடுகளில் இருந்து 100 படங்கள் திரையிடப்பட்டன.

இந்நிலையில், சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று மாலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பொதுச் செயலர் இ.தங்கராஜ், இணை இயக்குநர் முரளி, விழாவின் நடுவர்களான இயக்குநர்கள் வசந்தபாலன், எஸ்.எஸ்.ஸ்டான்லி உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில், தமிழ்ப் பிரிவில் உடன்பிறப்பே, கர்ணன், தேன், கட்டில், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், ஐந்து உணர்வுகள், மாறா, பூமிகா, சேத்துமான், கயமை கடக்க ஆகிய 11 படங்கள் போட்டியில் பங்கேற்றன.

சிறந்த படமாக இயக்குநர் வசந்த் எஸ்.சாய் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்துக்கு முதல் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசுக்கு ‘தேன்’, ’சேத்துமான்’ ஆகிய இரு படங்கள் தேர்வு பெற்று, தலா ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

இதுதவிர, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மூத்த இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவுக்கும், ‘அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது’ பாடகர் சித்ராமுக்கும், சிறந்த நடுவர் விருது ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தில் நடித்த லட்சுமி பிரியாவுக்கும் அளிக்கப்பட்டது. இவர்கள் மூவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT