ஒளிப்பதிவாளர்கள் பலரும் இயக்குநர்களாக அவதாரம் எடுத்து வரும் நிலையில் கொஞ்சம் வித்தியாசமாய் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார் மனோஜ் பரமஹம்சா. ‘‘ஈரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நண்பன்’ போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் தயாரித்த ‘பூவரசம் பீப்பீ’ படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தனது ஒளிப்பதிவு, மற்றும் தயாரிப்பு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.
ஒளிப்பதிவாளராக இருந்த நீங்கள் ஒரு தயாரிப்பாளராக மாற என்ன காரணம்?
தயாரிப்பாளர் ஆகணும்கிறதுக்காக நான் ‘பூவரசம் பீப்பீ ’ படத்தை தயாரிக்க வில்லை. இந்தப் படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீமுடன் சில குறும்படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். அப்போது அவர் சின்னப் பசங்களை மையமா வைத்து படத்தோட கருவைச் சொன்னார். ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. ‘நண் பன்’ படத்தை முடிச்சு இதை படமா எடுக்கலாம்னு நினைச்சோம். குறைந்த ஆட்கள், குறைந்த பொருட்கள் வச்சு படமா எடுக்கலாம்னு திட்டமிட்டோம்.
இதுக்காக அப்போது முதலே ஒவ்வொரு பொருளா சேர்க்க ஆரம்பிச்சோம். பிறகு 3 சிறுவர்களை வைத்து நம்பிக்கையுடன் படத்தைத் தொடங்கி விட்டோம். ஷுட்டிங்கை விட படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்குதான் அதிக பணம் தேவைப்பட்டது. நான் ஒரு தெலுங்கு படத்திற்கு ஒளிப்பதிவு செய்து அந்த பணத்தை வைத்து இதன் இறுதிக் கட்ட பணிகளை முடித்தேன். மொத்தத் தில் இந்தப் படத்தை எடுத்து முடிக்க 2 ஆண்டுகள் ஆனது.
மற்ற ஒளிப்பதிவாளர்கள் மாதிரி தொடர்ச்சியா நீங்க படங்கள் பண்ணாத தற்கு என்ன காரணம்?
எனக்கு ஒவ்வொரு படமா பண்றது தான் பிடிக்கும். ஒவ்வொரு படங்க ளுக்கும் சிறிது இடைவெளி விட்டு 3 மாசம் கழிச்சு தொடங்கப்போற படத் திற்கு இடங்களைத்தேர்வு செய்த பிறகு தான் ஷூட்டிங் போவேன். அதோடு நான் தமிழ்ப் படங்களுக்கு நடுவே சில தெலுங்குப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்வதால் இங்கே குறைவாக படங் களைச் செய்வதாக உங்களுக்கு தோன்றுகிறது.
ஒளிப்பதிவாளர்கள் பலரும் இயக்குநர் களாகவும் மாறி வருகிறார்கள். நீங்கள் இயக்குவீர்களா?
ஒவ்வொருவருக்கும் திரைத் துறைக் குள் நுழையும்போதே ஒரு கனவு இருக்கிறது. அதன்படி செயல்படுகிறார் கள். எல்லோரும் படம் இயக்கும்போது ஏன் ஒரு ஒளிப்பதிவாளர் படத்தை இயக்கக்கூடாது? ஒளிப்பதிவாளர் களுக்கு இயக்குநர்கள் ஆக எல்லா தகுதிகளும் இருக்கு.
இயக்குநராவதற்கு தேவையான முதல் விஷயம் எழுதுவது. ஆனால் எனக்கு உட்கார்ந்து எழுதும் பொறுமை கிடையாது. நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தையும் நான் வளர்த்துக் கொள்ளவில்லை. அதனால் படங்களை இயக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. இயக்குவதை விட, நாலு பேரை இயக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ் ஒளிப்பதிவாளர்கள் பலரும் இந்திப் படங்களில் பணியாற்றி நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்கள். நீங்கள் ஏன் இதுவரை இந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யவில்லை?
இந்தி திரையுலகம் வேற மாதிரி போயிட்டு இருக்கு. வழக்கமான கமர்ஷி யல் மசாலா, வித்தியாசமான கதையம் சம் உள்ள படங்கள் பண்ணிட்டு இருக் காங்க. வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள்ல பணியாற்றுவது எனக்கு பிடிக்கும். ஆனால் அங்கே வித்தி யாசமான படம் பண்ணும் இயக்குநர்கள் தங்களுக்கென்று ஒரு டீமை வைத்துள் ளனர். அனுராக் கஷ்யாப், விஷால் பரத்வாஜ் போன்ற இயக்குநர்களுடன் படம் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். அதே நேரத்தில் கமர்ஷியல் படங்களைச் செய்வதில் எனக்கு விருப்பமில்லை.
ஒளிப்பதிவு இப்போது டிஜிட்டல் மயமாகி வருகிறது. இந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
மாற்றத்தை நம்மால் தடுக்க முடியாது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செலவு குறைவு. உதாரணமாக ‘பூவரசம் பீப்பீ’ படத்தை நாங்கள் பிலிமில் எடுத்தி ருந்தால் செலவு அதிகமாகி இருக்கும். அதனாலேயே இந்தப் படத்தை எடுப்பதற்கு முன்பு சொந்தமாக ஒரு டிஜிட்டல் கேமிரா வாங்கி அதில் 3 மாதங்கள் பயிற்சி எடுத்தேன்.
எப்படி எல்லாம் ஷாட் வைக்கணும் என்று படித்துத்தான் டிஜிட்டலுக்கு மாறினேன். ‘ரேஸ் குர்ரம்’ தெலுங்கு படம்கூட நான் டிஜிட்டலில் எடுத்ததுதான். பிலிமில் பண் ணினால் என்ன கிடைக்குமோ அதே விஷயத்தை நான் டிஜிட்டலில் செய்ததாக பாராட்டினார்கள்.
டிஜிட்டலில் எடுப்பதை விட பிலிமில் எடுக்கும் படங்கள் அதிக காலம் இருப்பதாக கூறி ஹாலிவுட்டில் இப்போது பிலிமிலேயே படங்களை எடுக்கிறார்களாமே?
ஹாலிவுட்டில் இரண்டு விதமான படங்கள் இருக்கின்றன. ஒன்று கமர்ஷி யல் படங்கள். அந்த படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட். அதை எல்லாம் ஃபாக்ஸ் ஸ்டார், 20த் செஞ்சுரி பாக்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள்தான் எடுக்கிறார்கள். இந்த படங்களை எல்லாம் நீங்கள் பிலிமில் எடுக்க முடி யாது. அவை நீண்டகாலம் இருக்க வேண் டிய தேவையும் இல்லை. அதனால் டிஜிட்டலில் செய்வதுதான் எளிது.
இன்னொரு குரூப் கிளாசிக் படங் களை எடுக்கிறது. அது சின்ன குரூப் தான். அவர்கள் எடுக்கும் படங்கள் நீண்ட காலத்திற்கும் நிற்கும். அவர்களுக் காகத்தான் கோடாக் நிறுவனம் தாங்கள் 2016 வரை பிலிம் சப்ளை செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள். எப்போதுமே பிலிம்தான் பெஸ்ட்; அதுல எந்தவித சந்தேகமும் கிடையாது.
தொடர்ச்சியாக படங்களை தயாரிக் கும் ஆசை இருக்கிறதா?
படம் தயாரிப்பது பெரிய பிரச் சினையே இல்லை. ஆனால் அதை ரிலீஸ் செய்வதுதான் பெரிய தலைவலி. ரிலீஸ் என்று வரும்போது எல்லோருமே படத்தை ஒரு பொருளாகத்தான் பார்க்கிறார்கள். ‘ என்ன விலை?’ என்று கேட்கிறார்கள். விலையைச் சொன்னால், “இவ்வளவு விலை எல்லாம் போகாது, நடிகர்கள் இல்லை, ஐட்டம் டான்ஸ் இல்லை” என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியவில்லை. படம் எடுக்கும்போது என்னை யாரும் கேள்வி கேட்கவே இல்லை. ஆனால் ரிலீஸ் செய்ய முயற்சி செய்யும்போது நிறைய கேள்விகள் வருது. அதனால் நான் கொஞ்சம் மனவருத்தத்தில் இருக்கிறேன்.