விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வீரமே வாகை சூடும்'. இப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் விஷாலுடன் பணிபுரிந்துள்ளனர்.
விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஏ.வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘லத்தி’ என்ற படத்தில் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். இது விஷால் நடிக்கும் 32-வது படமாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது. இதில் விஷாலுக்கு நாயகியாக சுனைனா நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். 'லத்தி' படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், இசையமைப்பாளராக சாம் சி.எஸ். பணிபுரிகின்றனர்.
இந்த இரு படங்களுக்குப் பிறகு விஷால் நடிக்கவுள்ள 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.