நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் 'இது நம்ம ஆளு' படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்து வரும் இப்படத்தை டி.ராஜேந்தர் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
சமீபத்தில் 'இது நம்ம ஆளு' படத்தின் 'மாமன் வெயிட்டிங்' பாடலை சிம்பு மற்றும் ஆதா ஷர்மா நடனமாட சென்னையில் படமாக்கினார்கள். படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை, திரையரங்க வெளியீட்டு உரிமை, இசை உரிமை அனைத்தும் கடும் போட்டியின் இடையே விற்பனையானது.
தற்போது இப்படத்தின் பணிகள் முடிவு பெறும் நிலையில் இருப்பதால், படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்துமே அதற்குள் பேசித் தீர்க்கப்படும் என தெரிகிறது.