ஆண்டு இறுதி வந்துவிட்டாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அதனைத் தொடர்ந்து பொங்கல் என்று வரிசையாக பெரிய பட்ஜெட் படங்கள் தொடங்கி, ஓடிடி படங்கள் வரை அனைத்து வகையான படங்கள் வெளியீட்டுத் தயாராகிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில படங்கள் வெளியாகின்றன. அதில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ள படங்களைப் பற்றிய முன்னோட்டம் இதோ...
1) ராக்கி: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா ரவி, பாரதிராஜா, ரோஹினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராக்கி'. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரித்துள்ள இப்படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்போதே படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டாலும் கரோனாவால் இறுதிகட்ட பணிகள் தடைப்பட்டன. வழக்கமான தமிழ்ப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட காட்சியமைப்புகள் கொண்ட படம் என்பதை முதல் ட்ரெய்லர் கட்டியம் கூறியது. அதனை சமீபத்தில் வெளியான மற்றொரு ட்ரெய்லரும் உறுதி செய்தது. ‘ரா’வான காட்சிகளும் ரத்தம் தெறிக்கும் வன்முறையும் கொண்ட கேங்ஸ்டர் படமான ‘ராக்கி’ வரும் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
2) ரைட்டர்: பொதுவாக பா.ரஞ்சித் தயாரிக்கும் படங்கள் என்றாலே அதில் வித்தியாசமான கதைக்களமும், இயல்பான காட்சிகளும் இடம்பெறும். ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களே இதற்கு சாட்சி. அந்த வரிசையில் தற்போது மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘ரைட்டர்’. சமுத்திரக்கனி நடித்துள்ள இப்படத்தை பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தை ப்ராங்க்ளின் ஜோசப் இயக்கியுள்ளார். ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளராக ப்ரதீப் காளிராஜா, எடிட்டராக மணிகண்டன் சிவகுமார் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது ‘விசாரணை’, ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களில் பேசப்பட்ட போலீஸ் சித்ரவதை போன்ற விஷயங்களை ஒரு போலீஸ் ஸ்டேஷன் ரைட்டரின் பார்வையில் இப்படம் பேசும் என்று தெரிகிறது. வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
3) அத்ரங்கி ரே / கலாட்டா கல்யாணம்
தனுஷ் நடித்துள்ள பாலிவுட் படம். 2013-ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் - தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான ‘ராஞ்சனா’ படம் பெரும் வெற்றி பெற்றது. தற்போது இதே கூட்டணி மீண்டும் இணைகிறது என்ற அறிவிப்பே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது. இதில் தனுஷுடன் அக்ஷய் குமார், சாரா அலி கான் இருவரும் நடித்துள்ளனர். ‘ராஞ்சனா’வைப் போன்றே இதுவும் ஒரு முக்கோண காதல் கதை தான் எனினும் அதில் இருந்த கொண்டாட்டமும், எமோஷனல் காட்சிகளும் இதில் ஒரு படி அதிகமாகவே இருக்கலாம் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் என்பதும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பிற்கு மற்றொரு காரணம். இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் டிச. 24 அன்று வெளியாகிறது.
4) 83: 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் '83' .கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். இதற்காக கபில் தேவ் நேரடியாகவே ரன்வீர் சிங்கிற்கு பயிற்சி அளித்துள்ளார். படத்தில் கபில் தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். தஹீர் ராஜ் பாசின், சாகீப் சலீம், ஆமி விர்க், ஜீவா, அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இந்திய அணியின் வீரர்களாக நடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டுள்ளது.
5) ஆனந்தம் விளையாடும் வீடு: நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சேரன், சிவாத்மிகா, சரவணன் உள்பட ஒரு பெரும் நடிகர் பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு'. சமீபத்தில் வெளியான குடும்பப் படங்கள் அனைத்தும் தோல்வியைத் தழுவியதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் படங்களில் பட்டியலில் இருக்கும் ஒரே குடும்பப் படம் என்பதாலும் இப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6) மின்னல் முரளி: ‘மாயநதி’, ‘ஃபாரன்ஸீக்’, ‘தீவண்டி’, ‘வைரஸ்’ என தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து வரும் டோவினா தாமஸ் தற்போது கையிலெடுத்திருப்பது ஒரு சூப்பர்ஹீரோ கதை. இதற்கு முன் இந்தியாவில் வெளியான சூப்பர்ஹீரோ திரைப்படங்களில் ‘க்ரிஷ்’ தவிர்த்து மற்ற படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெற்றதில்லை. இதற்கு ‘க்ரிஷ் 3’ படமும் விதிவிலக்கல்ல. அந்தவகையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியாவிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோ படம். பாசில் ஜோசப் இயக்கியுள்ள இப்படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படமும் வரும் 24ஆம் தேதியன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.