‘மாநாடு’ வெற்றிக் கொண்டாட்டத்துக்கு சிம்பு வந்திருக்க வேண்டும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இப்படம் கடந்த நவ.25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் இன்று (21.12.21) சென்னையில் நடைபெற்றது. இதில் வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவில்லை.
இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:
''இந்தப் படம் குறித்து நான் நிறைய பேட்டிகள் கொடுத்துவிட்டேன். ஒரு படத்தின் வெற்றி கடைசியில் அந்தப் படத்தின் ஹீரோவுக்குத்தான் போய்ச் சேரும். எனினும் அந்த வெற்றிக்குக் காரணம் இயக்குநரும், கதையும்தான் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு நல்ல கதை, நல்ல திரைக்கதை யாரையும் உச்சத்துக்குக் கொண்டு சேர்த்துவிடும். இந்தப் படம் இதன் ஹீரோவை ரொம்ப நாட்களுக்குப் பிறகு உயரத்தில் கொண்டுபோய் அமர வைத்திருக்கிறது.
எனக்குப் புரியவில்லை. இது ஒரு உண்மையான வெற்றி. ஆனால், இப்படத்தின் வெற்றி நாயகன் இந்த இடத்தில் இல்லாதது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்னதான் ஷூட்டிங் இருந்தாலும் இங்கே வந்திருக்க வேண்டும். என்னமோ தெரியவில்லை. இந்தப் படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பம். இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் இங்கு வந்து கொண்டாடியிருக்க வேண்டும். கஷ்டமாக இருக்கிறது. அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்? அப்படிப்பட்ட ஒரு வெற்றியைக் கொண்டாட அந்த கதாநாயகன் இங்கே இருக்கவேண்டும். படப்பிடிப்பின்போது எப்படி இருந்தோமோ வெற்றிக்குப் பின்பும் அப்படியே இருக்கவேண்டும். அப்போதுதான் இன்னொரு வெற்றி கிடைக்கும்''.
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.