'கூழாங்கல்' திரைப்படம் ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என்று விக்னேஷ் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கூழாங்கல்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தைப் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியது படக்குழு.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 'கூழாங்கல்' திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளையும் வென்றது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கும் 'கூழாங்கல்' படம் பரிந்துரைக்கப்பட்டது. வரும் 2022-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அயல்நாட்டு / சர்வதேசத் திரைப்படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் ஒரு படம் பரிந்துரைக்கப்படும். இந்தப் பட்டியலில் இருந்து 15 படங்கள் இறுதி செய்யப்பட்டு அதில் ஒரு படத்துக்கு சிறந்த அயல்நாட்டுத் திரைப்படத்துக்கான விருது வழங்கப்படும்.
இந்நிலையில் 'கூழாங்கல்' திரைப்படம் இந்த இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என்று விக்னேஷ் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“சிறந்த சர்வதேச திரைப்பட விருதுக்கான இறுதிப் பட்டியலில் ‘கூழாங்கல்’ திரைப்படம் நுழையும் என்று நம்புகிறேன். ‘லகான்’ படத்துக்குப் பிறகு ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து ஒரு இந்தியப் படம் இந்தப் பட்டியலில் நுழைவது மிகப்பெரிய சாதனை. வினோத்ராஜும் இதற்குத் தகுதியானவர்.”
இவ்வாறு விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.