'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷ் உடன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ராணா.
'கொடி' படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கல்லூரியில் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
இப்படத்தை கெளதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டையின்மெண்ட்' நிறுவனம் தயாரித்து வருகிறது. நாயகியாக 'ஒரு பக்க கதை' படத்தின் நாயகி மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து மும்பையில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ராணா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இன்று தனுஷ் உடன் ராணா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சென்னை வெள்ள பாதிப்பின்போது தனுஷ் மற்றும் ராணா இருவரும் இணைந்து பெரிய அளவில் உதவிகளை வழங்கினார்கள். அதுமட்டுமன்றி இருவரும் நெருங்கிய நண்பர்களாவர். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' என்பது குறிப்பிடத்தக்கது.