தமிழ் சினிமா

திரை விமர்சனம்: ஜெயில்

செய்திப்பிரிவு

நகர்ப்புறத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்திருந்த சென்னையின் பூர்வீகக் குடிகளை, அவர்கள் காலம்காலமாக வசித்த வாழ்விடங்களில் இருந்து வேரோடு பிடுங்கி சென்னைக்கு 30 கி.மீ தள்ளிமறு குடியமர்வு செய்திருப்பதை கேள்வி கேட்கிறது படம். கண்ணகி நகர் என்பதை காவேரி நகர் என்றுபெயர் மாற்றி, அங்கு வாழும் கர்ணா, ராக்கி, கலை எனும் 3 இளைஞர்களின் வாழ்வு எவ்வாறு சிதைவுறுகிறது என்று சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். காவேரி நகரில் கஞ்சா விற்கும் இருபிரிவினர் இடையே தொடரும்தொழில் போட்டி, அதனால் உண்டாகும் கைகலப்பு, மோதல், கொலை சம்பவங்கள் அடுக்கடுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தனது சுயநலத்துக்காக ராக்கியை பயன்படுத்தும் போலீஸ்காரர் முருகப்பெருமாள், பாண்டிச்சேரியில் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான ஹெராயினை கைப்பற்றி வரச் சொல்கிறார். அதை கைப்பற்றி வந்து மறைத்துவைத்த ராக்கி, முருகப்பெருமாளுக்கு டிமிக்கி கொடுக்க முயற்சிக்கும்போது ராக்கியை அவர் துரத்துகிறார். ராக்கியுடன், கர்ணாவும், கலையும் இணைந்து தப்பிக்கும்போது ராக்கி கொல்லப்படுகிறான். நண்பனின் கொலைக்குகாரணமான போலீஸ் அதிகாரியை கர்ணா எப்படி பழிவாங்க நினைக்கிறான், எப்படி பழி வாங்குகிறான், முடிவு என்ன என்பது மீதிக் கதை.

தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்யும் வகையில் கர்ணா எனும் முரட்டு இளைஞனாக நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். கதாநாயகி அபர்ணதி அழகாக மிளிர்கிறார். நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்புகளை சரியாகவே பயன்படுத்துகிறார்.

ராக்கியாக நந்தன் ராமும் (இசையமைப்பாளர் சிற்பியின் மகன்), கலையாக ‘பசங்க’ பாண்டியும் சென்னையின் அசல் லோக்கல் பையன்களாக வந்து பெருமை சேர்க்கின்றனர். போலீஸ் அதிகாரி முருகப்பெருமாளாக படம் முழுக்க வரும் இயக்குநர் ரவிமரியா, நடிப்பில் முழு பரிமாணத்தையும் காட்டுகிறார். ஜி.வி.பிரகாஷின் அம்மாவாக வரும் ராதிகா, சமூக ஆர்வலராக வரும் பி.டி.செல்வகுமார் ஆகியோர் கதைக்குப் பக்கபலம்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘காத்தோடு காத்தானேன்’, ‘டுமாங்கோலி’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணனும், பாக்கியம் சங்கரும் இணைந்து எழுதிய வசனங்களில், மறுகுடியமர்வு மக்களின் பேச்சு வாசனையடிக்கிறது. கணேஷ் சந்திராவின் கேமரா, காவேரி நகரின் சந்துபொந்துகளைக்கூட அள்ளிவந்து நம் கண்முன் நிறுத்துகிறது. கலப்படம் இல்லாத எதார்த்தத்துடன் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கும் அன்பறிவ் மாஸ்டரைதட்டிக்கொடுக்கலாம்.

காவேரி நகர் போன்ற மறுகுடியமர்வில் வசிக்கும் மக்களை குற்றப் பின்னணியுடனேயே நகர்ப்புற மக்கள் அச்சத்துடன் நோக்கும் பொதுப்புத்தி உருவாக அரசியல் கட்சியினரும், போலீஸாரும் எவ்வாறு உடந்தையாக இருக்கின்றனர் என்பதுஒருசில காட்சிகளில் சொல்லப்படுகிறது. போலீஸார் இப்பகுதி மக்களை எப்படி கையாள்கின்றனர் என்பது காவல் அதிகாரி முருகப்பெருமாள் பாத்திரம் மூலம் காட்டப்படுகிறது.

சென்னையின் பூர்வகுடிகள் வலுக்கட்டாயமாக விரட்டியக்கப்படுவதை சித்தரிக்கும் பெரிய அளவிலான நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ளதாக படம் பற்றிப் பேசப்பட்டது. ஆனால், தனிநபர் சார்ந்த முட்டல் மோதல்களுக்குள் கதை சிக்கிக் கொண்டதால் கட்டாய இடப்பெயர்வு பற்றி அழுத்தமாக சொல்லப்படவில்லை. எனினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள வசந்தபாலனின் ‘ஜெயில்’ படம், ரசிகர்களை ஏமாற்றவில்லை.

SCROLL FOR NEXT